தீராத தாகம்!

ஏன் பெண் எழுதும்போது, அவள் பெண் என்பதை மட்டுமே முன்நிறுத்தி, அவளது எழுத்து சுதந்திரத்திற்கு அங்கேயே முட்டுக்கட்டுகிறாய்?

மானிடா! ஏன் பெண் எழுதும்போது, அவள் பெண் என்பதை மட்டுமே முன்நிறுத்தி, அவளது எழுத்து சுதந்திரத்திற்கு அங்கேயே முட்டுக்கட்டுகிறாய்?

தீராத தாகம்
அதன் தாக்கம் தன்னை
தூக்கம் மீது தெளித்து
துன்புறுத்த
நித்தமும் நித்திரை
நிந்தனைக்கு உள்ளானது
ஆம்
தீராத தாகம்….

இதுவும் ஒரு வித போதையே
காதல் கண்ட கண்கள்
நேசம் கொண்ட நெஞ்சம்
மோகம் கொண்ட தேகம்
என இவை அனைத்தையும்
தூக்கி எரிந்து விட்டு
தீராத தாகத்துடன்
நித்தமும்
நித்திரையின்றி
நீரில்லா நதியில்
நீந்த துடித்து
ஏங்கி தவிக்கும்
போதை இது….

மானிடா!
தெரிந்துகொள்…

உன் பள்ளி பருவம்
என்னுள்ளும் படர்ந்ததுண்டு…
உன் தாய் மடி ஏக்கம்
என் நாடிகளிலும்  கலந்ததுண்டு
உன் பருவக் காதல்
என் நெஞ்சிலும் மலர்ந்ததுண்டு…

உன் நடுநிசி சோகம்
என் தலையணையையும் நனைத்ததுண்டு…
உன் பஞ்சத்தின் போராட்டம்
என் வயிற்றையும் வாட்டியதுண்டு
உன் வாழ்வின் நிதர்சனம்
என் வாழ்விலும் வகுத்ததுண்டு…

புரிந்துக்கொள்…
உன் வாழ்வின் நிதர்சனங்கள்
அத்தனையும்
என் வாழ்விலும் வகுத்ததுண்டு…

பின் ஏனடா
இவள் எழுதுகோல் பிடிக்கையில்,
“இவள்”
எழுதுகோல் பிடிக்கையில் மட்டும்
இவளின்
காதல் வர்ணனைகளையும்
பஞ்சத்தின் பாடல்களையும்
காமத்தின் கற்பனைகளையும்
பாசத்தின் பிரதிபலிப்புகளையும்
ஒரு எழுத்தாளரின் சுதந்திரம்
சுடர்விடுவதாய் காணாமல் – 

ஒரு பெண்ணாகவோ,
மனைவியாகவோ,
மருமகளாகவோ,
மாமியாராகவோ
அவளை மனதில் கொண்டு
அவள் எழுத்துகளை
அவள் வாழ்வோடு ஒப்பனையிட்டு
அதன் பிரதிபலிப்பென
விமர்சனம் கொண்டு
அவள் வார்த்தைகளுக்கு
அங்கேயே முட்டுக்கட்டுகிறாய்?

மானிடா…
புரிந்துக்கொள்…
உன் வாழ்வின் நிதர்சனங்கள்
அத்தனையும்
என் வாழ்விலும் வகுத்ததுண்டு…

ஆனால் உன்னில் இல்லா
வார்த்தைகளின் மோகமும்
வர்ணனைகளின் தாகமும்
என்னுள் நான்
கண்டதுண்டு….

தீராத தாகம் இது…
ஆம்…
தீராத தாகம் இது…
ஒரு பெண்,
மனைவி,
தாய் ,
மருமகள் ,
ஆசிரியை
என
அத்தனையும் மறந்து
வாழ்வின் நிதர்சனங்களை
வர்ணனைகளால் செதுக்கும்
வார்த்தைகளின் சிர்ப்பியாய்,
ஒரு எழுத்தாளராய் – 
ஒரு எழுத்தாளராய் மட்டுமே
என்னையும்
என் வார்த்தைகளையும்
இந்த உலகம் அறியுமானால்….
இந்த தாகம்…
தீராத இந்த தாகமும்
தீர்ந்தப்பின் துயில் கொள்ளும்
திருப்தியாய்!!

தலையங்கப் படம் ‘சிந்துபைரவி ‘ திரைப்படத்திலிருந்து எடுக்கப் பட்டது.

About the Author

Seetha

Seetha is a mother, homemaker, a wordsmith- poetry possessed & math obsessed, aiming to make a living through poetry! If you don't believe it, check out her website: www.promisingpoetry.org read more...

1 Posts | 1,408 Views
All Categories