மாமியாரின் பயத்தை நம்மளால கொஞ்சம் புரிந்துகொள்ள முடியுமா?

'தன் கைய மீறி தன் பையன் போறான்'னு தெரியும் போது இயற்கையா எல்லா மாமியார்களுக்கும் இருக்கும் ஒருவித மனஉளைச்சலை புரிந்து கொள்ள முயல்வோமா?

‘தன் கைய மீறி தன் பையன் போறான்’னு தெரியும் போது இயற்கையா எல்லா மாமியார்களுக்கும் இருக்குற ஒரு விதமான மனஉளைச்சலை புரிந்து கொள்ள முயல்வோமா?

பதினெட்டு வயசு எனக்கு, காலேஜ் படிச்சிட்டு இருந்தேன். அப்பா காதை பிடிச்சிட்டு தூங்குற பழக்கம் அப்பவும் இருந்துது. ஞாயிற்று கிழமை மத்தியானம் நல்ல மீன் குழம்பு வச்சு சாப்டுட்டு அப்பா பக்கத்துல காதை பிடிச்சு தடவிட்டு தூங்குறது ஒரு சுகம்.

என்னோட அப்பத்தா அத பாக்குறப்பெல்லாம் சொல்லுவாங்க, “இப்படி மத்தியான நேரத்துல இந்த புள்ள திண்ணோனே படுத்து தூங்குதே,  இதெல்லாம் எங்க போய்  கல்யாணம் பண்ணி ஒழுங்கா குடும்பம் நடத்த போகுதோ”ன்னு.

அடுத்த அஞ்சு வருஷத்துல கல்யாணம் நடந்தது. மாமியாரை அம்மாவா எல்லாம் பாக்க முடியாது என்னால. எங்க அம்மாவையே நான் மாமியார் மாதிரி தான் பார்ப்பேன். அதனால அந்த லாஜிக் எல்லாம் எனக்கு ஒத்து வராது.

ஆனா முதல் முறை பொண்ணு பாக்குற அப்போ அவங்கள பாத்ததுல இருந்து ஒரு விதமான ஈர்ப்பு இருந்துச்சு. பேருக்கு ஏத்த மாதிரி அறிவான பேச்சு; ரொம்ப பொறுப்பான ஒரு பெண் , எதையும் சரி தப்புன்னு ஆராயுற தன்மை, இதெல்லாம் பிடிச்சிருந்தது.

அம்மாக்களுக்கு என் இந்த பயம்?

ஆனாலும் ஏனோ கல்யாணம்னு ஆயிட்டா இந்த அம்மாக்களுக்கு ஒரு மெல்லிய பய உணர்வு வருது. அந்த பயம்தான் கொஞ்ச நாள்ல  ‘மருமகளை கொஞ்சம் கட்டுக்குள்ள வைக்கணும்’ன்னு ஒரு உந்துதலையும் ஏற்படுத்துது.

என்னால என்னமோ என் மாமியாரோட பயத்தை பாத்து சிரிக்கவோ, சந்தோஷப்படவோ, இல்ல அத எனக்கு சாதகமா பயன்படுத்திக்கவோ முடியல. அப்போ புரிஞ்சது நா கண்டிப்பா நல்லாத்தான் குடும்பம் நடத்துவேன்னு.

பெரும்பாலான குடும்பத்துல மாமியார் மருமகள் பிரச்சனை வர்றதுக்கு காரணம், இந்த பயம். இந்த பயம் தான் கொஞ்ச நாள்ல ‘நீ பெரிய ஆளா  நா பெரிய ஆளா’ன்னு பாக்குற அளவுக்கு ஒரு பெரிய ஈகோ போராட்டத்தை ஏற்படுத்தி விட்றுது.

அம்மாக்களோட பயத்தை, ஒரு  நல்ல ஆண் மகனை வளர்த்து ஆளாக்கிய திமிரை தவறுன்னு சொல்ல முடியாது. நம்ம எப்போ எதை ஒரு உறவுல  குற்றமா பாக்குறோமோ, அப்போ அது இன்னும் பெரிய குற்றமா தெரியும். மாமியார் வில்லியாத்தான் தெரிவாங்க. ஆனால், அது தான் அந்த வயசோட இயல்புன்னு நெனச்சு, அந்த உறவுக்கு கூடுதலா நெருங்க கொஞ்சம் முயற்சி எடுத்து பாருங்க, மாமியார் அம்மாவா  தெரியலேன்னாலும் பரவாயில்ல வில்லியா  தெரியாம இருப்பாங்க.

தன் கைய மீறி தன் பையன் போறான்னு தெரியும் போது இயற்கையா எல்லா அம்மாக்களுக்கும் இருக்குற ஒரு விதமான மனஉளைச்சலை கொஞ்சம் நம்ம அன்பாகவும் அக்கறையாகவும் வருடிக் கொடுத்தா, மாமியார் மருமகள் உறவு பல  கசப்புக்கள் தாண்டியும் நிலைத்திருக்கும். இது உங்க திருமண பந்தத்துல காதலையும் நெருக்கத்தையும் அதிகரிக்கும்.

அம்மா பையனுக்கான உறவுக்கு தேவையான இடம்

மாமியாருக்கு வேண்டியது எல்லாம் “என் கணவர்”னு நம்ம  சொல்ற உரிமையை தாண்டி “உங்க பையன்”னு நாம கொடுக்குற அந்த உறவுக்கான மரியாதை தான்.  அம்மா பையனுக்கான உறவுக்கு தேவையான இடத்தையும் , அவங்க அன்பை  பகிர்ந்துகிறதுக்கு உண்டான சூழ்நிலையையும் கொடுத்து பாருங்க.

கணவர்கள் அதிகமா வெளிப்படுத்தலைன்னாலும் அவங்க அம்மாவுக்குனு உண்டான அந்த மன கஷ்டத்தையும் அவங்க அம்மாகூட பேசி பகிர முடியாத இயலாமையும் அவங்கள பல நேரம் வருத்தப்படத்தான் வைக்கிது.

திருமண வாழ்க்கைல பல ஆண்கள் கஷ்டப்படுற ஒரு விஷயம் அம்மாக்கும் மனைவிக்கும் இடையில் மாட்டி முழிப்பதுதான். அம்மாக்களை பெருசா அனுசரிச்சு புரிஞ்சுக்க சொல்ல முடியாது, ஆனா ஒரு மனைவியா நீங்க ஒரு அடி இறங்கி போனா, உங்க மாமியாரோட புரிதல் கொஞ்சம் மாறும். பயம் கொஞ்சம் விலகும்.

ஒரு முப்பது வருடமா ஒரு குடும்பத்தை தன் ஆளுமைல வைத்திருந்த எல்லா அம்மாக்களும், ‘எங்க அதை இழந்துருவோமோ’ன்னு ஒரு  பயத்துல, கொஞ்சம் விறைப்பா  இருக்குறதுல ஆச்சர்யம் ஒன்னும் இல்ல. அது மனித இயல்பு.

ஒரு சின்ன முயற்சி, கொஞ்சமா மனம் விட்டு பேசி புரிஞ்சுக்கிட்டோம்னா, இந்த பந்தம் விரிசல் வந்தாலும், அன்பால், புரிதலால் பக்குவப்பட்ட ஒன்றாக நெடு நாள் போகும்.

Image: மகளிர் மட்டும் படத்தில் ஒரு காட்சி 

About the Author

Preethi

Food blogger and a writer by passion. Writing has been my source of let out, ever since my college days. Am a woman with a strong belief that you can make difference in everyone's read more...

1 Posts | 2,141 Views
All Categories