Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
படித்து வேலைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு பெண் சுதந்திரமாய் இருப்பதாய் அர்த்தமில்லை; இமையத்தின் வீடும் கதவும் சிறுகதை இதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
சாதி, மதம், இனம், வர்க்கம் என எந்த ரீதியிலும் மக்களைப் பாகுபடுத்தி ஆளும் சூழ்ச்சியை அறவே வெறுப்பதாய்க் கூறிக் கொள்ளும் முற்போக்குவாதிகளும் கூட பாலின ஒடுக்குமுறையை இயல்பான ஒன்றாகக் கருதி ஒதுக்கித் தள்ளுவதுதைக் காணலாம். எங்கெல்லாம் பெண்கள் தங்கள் மீதான வன்முறையினை எதிர் க்கின்றனரோ அங்கெல்லாம் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களே கூட அவர்களை வம்புக்கு இழுப்பது போன்று கேலிப் பேசி அவர்களின் கோபத்தை நியாயமான ஒன்றாகப் பார்ப்பதைத் தவிர்த்து நீர்த்து போகச் செய்யவே விரும்புகின்றனர்.
அவர்களின் காட்டம் நூற்றாண்டுக் கால அடக்குமுறையின் எதிர்ப்பின் வெளிப்பாடு என்பதனைப் புரிந்தும் புரியாதவாறு, வேண்டுமென்றே நக்கலாகவோ, சலிப்பாகவோ ஒதுக்கித் தள்ளுகின்றனர். இதே ரீதியில் மற்ற வகையில் ஒடுக்கப்பட்டோரிடம் கேலியாகப் பேசிவிடுவதில்லை அவர்கள். இதே முற்போக்குவாதிகள் சாதி ரீதியிலான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவரின் கோபத்தை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் நம்மை, நம் சாதிய மனோபாவத்தை உற்று நோக்கி உணர்ந்து, அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதாகப் பேசும் போது, அவர்கள் பேச்சின் உண்மையினைத் தாண்டி அதில் உள்ள பாசாங்கினைத் தான் நம்மால் அவ்வளவு எளிதாக கடக்க முடிவதில்லை. சாதிய அடக்குமுறைக்கு எவ்வகையில் குறைந்தது பாலின அடக்குமுறை? இந்திய நாட்டில் இந்த அடக்குமுறைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்தவை என்பதை அறியாதவர்கள் ஒன்றும் இல்லை இந்த அறிவாளிகள்.
மனித குலத்தின் விடுதலை ஒன்றே லட்சியம் எனக் கூறும் எந்த போராளியும் பெண் விடுதலையை இதிலிருந்து வேறொன்றாக தனித்துப் பார்ப்பதில்லை. அவ்வாறு பார்ப்பாராயின் அவருக்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவதில் சற்றும் நம்பிக்கை இல்லை என்றே எடுத்து கொள்ள வேண்டும். பெண்ணடிமைத்தனத்தைத் தவிர மற்ற எல்லா விதமான அடிமைத்தனத்தையும் நான் எதிர்க்கிறேன் என்று கூறும் ஒருவரின் கூற்றை நம்பி அவரைப் போராளி என்று எப்படி ஏற்றுக் கொள்வது? ஆனால் இன்று நம் சமூகத்தில் கிட்டத்தட்ட அனைத்து முற்போக்குவாதிகளும் இப்படியான ஒரு மனநிலையோடு தான் காணப்படுகின்றனர்.
இத்தகைய சூழலில் பெண் விடுதலை என்று நாம் பேச முனைகையில் “இப்போலாம் முன்ன மாதிரி இல்லை, எல்லாரும் படிக்கிறாங்க, வேலைக்கு போறாங்க, காலம் மாறிடுச்சு. உங்க பாட்டி, அம்மா காலம் வேற, இப்போ வேற. இன்னும் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்காதிங்க. அது அதுங்க விண்வெளிக்கே போயிட்டு வருதுங்க, இன்னும் அடக்கிறாங்க, ஒடுக்கறாங்கனுட்டு” என்பது போன்ற கருத்துக்கள் வீசி எறியப்படும். படித்து வேலைக்குச் செல்வதால் மட்டுமே ஒருவர் சுதந்திரமாய் இருப்பதாய் அர்த்தமில்லை என்று இவர்களுக்கு ஏன் புரிவதில்லை என்ற ஆயாசமே மிஞ்சுகிறது.
இதனை மிக எளிதாகப் புரிந்துக் கொள்வதற்கு இமையத்தின் வீடும் கதவும் சிறுகதைத் துணை புரிகிறது. தனது மகளின் திருமணத்திற்குப் பத்திரிகை வைக்கத் தனது கல்லூரிக் காலத் தோழி ரேவதியின் வீட்டிற்குச் செல்கிறார் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் சகுந்தலா. தொடர்பில் இருந்தாலும் பல்வேறு காரணங்களினால் இருவரும் கடந்த நான்கைந்து வருடங்களாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் பத்திரிகை வைக்கும் சாக்கில் தனது தோழியைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பை நோக்கி வருகிறார் சகுந்தலா. கிளம்பும் போது கூடவருவதாக இருந்த கணவர் வேலை காரணமாக பின்வாங்கி கொள்ளத் தனியே கிளம்பி வருகிறார். இங்கு ஆசிரியரான ரேவதியின் கணவரும் (அவரும் ஆசிரியரே) சென்னையில் உள்ள மகளைக் காணச் சென்று விட இருவருக்கும் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனித்திருக்கவும் மனம் விட்டுப் பேசிக் கொள்ளவும் ஒரு அருமையான சந்தர்ப்பம் வாய்க்கிறது.
கல்வியுரிமையில் ஆரம்பித்து வேலை, ஊதியம் என அனைத்திலும் பாகுபாடின்றி சமமாக நடத்தப்பட வேண்டும் எனவும், தொடர்ந்து திருமணத்திலும், குழந்தை பெற்று கொள்வதிலும் பெண்ணின் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டுமெனவும், அவளே அவள் வாழ்வு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் பேசி வந்த சூழலில், இவையெல்லாம் பொருளாதாரச் சுதந்திரம் வாய்த்தால் கைகூடி விடுமென நம்பினோம். அதையும் தாண்டி அரசியலில் பங்கேற்று, அங்குள்ள நம் உரிமைகளை எடுத்துக் கொள்ளும் போது சமூகத்தில் சரி பாதி உள்ள பெண்ணின் நிலையில் மிகப் பெரும் மாற்றத்தை உண்டு பண்ண முடியுமென பேசி வருகிறோம். படித்து வேலைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு பெண்ணின் பொருளாதார சுதந்திரத்தை இங்கு உறுதிப்படுத்தி விட முடியுமா?
இக்கதையில் வரும் ஆசிரியரான ரேவதி 910 ரூபாய் சம்பளத்தில் தனது ஆசிரியர் வேலையை தொடங்கி, இப்பொழுது 64000 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் எனினும், அவை எதுவும் இவர் கையில் இல்லை. ஏடிஎம் தபாலில் வந்த அன்று பார்த்தது மற்ற படி அதை கண்ணால் கூட இப்பொழுது காண்பதில்லை எனவும், தினம் பள்ளிக்கு சென்று வர ஆகும் 20 ரூபாயையும் கணக்காக எண்ணி டேபிளில் வைத்து விடுவார் தன் கணவர் எனவும் கூறுகிறார் ரேவதி. மேலும் தான் சற்றும் மகிழ்ச்சியாக இல்லை எனத் தோழியிடம் மனம் திறக்கிறார். டீ, காபி குடிக்கக் கூடக் காசு வேண்டும் எனத் தன் பணத்தையே தன் கணவரிடம் கேட்டுப் பெற வேண்டியுள்ளதே என அவர் அவமானத்தில் கூசி போவதுடன், தனக்கு வேண்டியவர்க்கு உதவக் கூட தன் கையில் காசில்லாத நிலையினை எண்ணித் துயரப்படுகிறார்.
நீரிழிவு நோயால் அவதிப்படும் தன் அம்மா அரசாங்க ஆஸ்பத்திரியில் நாள் முழுக்கக் கால் கடுக்க நின்று சுகர் மாத்திரை வாங்கிச் செல்வதைக் கூறும் ரேவதி, தனது தாய்க்கோ, தம்பி மற்றும் அவன் குடும்பத்திற்கோ ஏதும் தன்னால் செய்ய முடியாது போன தனது நிலையினைச் சொல்லி வேதனைப்படுகிறார். தனக்குத் தெரிந்தவர் இறந்து போன போது கூட தான் விரும்பியவாறு மாலை வாங்கிப் போடவோ, வீட்டுக்கு வந்து போகும் உறவினருக்கு கையில் பணம் கொடுத்து அனுப்பவோ, தம்பி மனைவிக்கும், குழந்தைகளுக்கும், தனது அம்மாவிற்கும் தீபாவளி, பொங்கல் என்று புதுத் துணி எடுத்துத் தரவோ கூடத் தனது சம்பளம் தனது கையில் இல்லாது போனது குறித்துத் தோழியிடம் கூறி நொந்துக் கொள்கிறார்.
கணிணிமயமாக்கப்படும் முன்னர் பள்ளிக்கு புடவை விற்க வருபவரிடம் வாங்கி விட்டு, கணவரிடம் விலையைக் கூட்டிச் சொல்லித் தன் பணத்தைத் தானே “திருடிய” நாட்களும் உண்டு. அப்பணத்தைக் கொண்டு வேண்டியவர்க்கு ரேவதியால் ஏதேனும் செய்ய முடிந்தது. ஆனால் இப்போது கம்ப்யூட்டர் பில் வந்து விட்டதால் அதுவும் முடிவதில்லை. கறாராகக் கணக்குப் பார்க்கும் கணவர் வெட்கமேயின்றி பில்லைக் கேட்டு விடுவதால் ரேவதியால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. தன் பணத்தையேத் தான் கேட்டுப் பெற வேண்டுமா என்றும், அதற்கும் கணக்கு வேறு காட்டித் தொலைக்க வேண்டுமா என்றும் வருத்தப்படும் ரேவதியைக் கண்டு சகுந்தலா ஆச்சர்யப்பட்டுப் போகிறார். அவர்களின் நட்பு வட்டத்திலேயே ரேவதி தான் ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு, குடும்பம் குழந்தைகள் என மிக வசதியாக வாழ்ந்து வருகிறாள் என அனைவரும் நினைத்து வருகின்றனர். இங்கு ரேவதி கதாபாத்திரத்தின் மூலமாக நமக்கு பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் குறித்தக் கேள்வியொன்றை நம் முன்னே வைக்கிறார் கதாசிரியர். படித்த, நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையில் உள்ள ரேவதி சுதந்திரமாக வாழ்கிறாரா? படிப்பும், வேலையும், பணமும் இருந்தும் அவரை அவர் விரும்பும்படி வாழ விடாமல் தடுப்பது எது? அவரது சுதந்திரம் எதனால், யாரால் பறிக்கப்படுகிறது?
அதே ஆசிரியர் பணியில் உள்ள அவரது கணவருக்கு இந்த நிலை இல்லையே? அதே படிப்பும், வேலையும், பணமும் உள்ள அவரது கணவரின் சுதந்திரத்தைக் குடும்பம் என்ற அமைப்புக் காவு வாங்கி விடாத போது ரேவதியின் சுதந்திரம் மட்டும் குடும்பத்தில் பலியாக்கப்படுவது அவர் ஒரு பெண் என்ற காரணத்தினால் என்றால் இது சமத்துவமற்ற நிலை இல்லையா? இதனை எதிர்த்துக் குரல் கொடுப்பது நியாயமேயன்றி வேறென்ன?
இங்கு சகுந்தலாவின் நிலை முற்றிலும் மாறானது என்றாலும், இருவரும் உரிமைகள் பறிக்கப்பட்டு, அது குறித்து ஏதும் செய்வதறியாமல் ஒரு கையாலாகாத நிலையில் அதற்கு ஏற்றவாறு வாழ பழகி கொண்டவர்கள். ஊராட்சி மன்றத் தலைவராக பெண்கள் இருப்பது ஏதோ ஒரு சாதனை எனக் கூறி அரசியலில் இப்போது பெண்கள் பங்கேற்க ஆரம்பித்து விட்டார்கள் எனவும் நிலைமை மாறி வருகிறது எனவும் கூறி வருபவர்கள் நிதர்சனம் அறியாது ஒரு வித மாய உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும். அரசியலில் வெறும் பெயரளவில் பங்கேற்பதில்லை நாம் வேண்டுவது; மாறாக அதில் உள்ள வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தித் தானும் மற்ற பெண்களும் அனைத்து உரிமைகளும் இச்சமூகத்தில் பெற்று வாழவும், எவ்விதத் தடையுமின்றி பங்கேற்கவும் முடிகிற சூழலையே நாம் இங்கு வலியுறுத்திகிறோம்.
ஆனால் இங்கு அரசியலமைப்பு நல்கியுள்ள வாய்ப்புகளைக் கூடச் சரியான முறையில் பயன்படுத்த முடியாத ஒரு நிலையே நிலவுகிறது. பெண் இங்குத் தேர்தல் அரசியலில் பங்கேற்பதையே விரும்பாதக் குடும்பங்களே அதிகம். அப்படியேத் தப்பித் தவறி ஒரு பெண் வருவதும் கூட பெரும்பாலும் தனது வீட்டு ஆணின் அரசியல் கனவுக்கு ஒரு நுழைவாயிலாக அல்லது ஒரு நுழைவுச்சீட்டாகத் தான் பயன்படுத்தப்படுகிறாள். அப்படி பயன்படுத்தபடுகிறவரே சகுந்தலா.
ஊராட்சி மன்றத் தலைவர் என்று ரேவதியால் கேலி செய்யப்படும் போது நொந்துக் கொண்டு, இரண்டாவது முறையாக பிரெசிடெண்டாக இருந்தாலும் தான் செய்யும் வேலையென்னவோ சமைப்பதும், வீட்டு வேலை செய்வதும் தான் எனக் கூறி ரேவதியைத் திகைக்கச் செய்கிறார். சகுந்தலா கூறுவதைக் கேட்கும் ரேவதிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இதுவே இங்கு நடைமுறையில் உள்ளதென்பது வாசகர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த உண்மை. நாமினேஷன் கொடுக்கச் சென்ற தினமும், கௌன்டிங் நடந்த நாளும் தவிர சகுந்தலா இவ்விசயமாக வெளியே சென்றதேயில்லை எனக் கூறுகிறார். அது மட்டுமன்றி பல்வேறு திட்டங்களுக்காக வரும் பணத்தைக் கூட அவரது கணவரே சகுந்தலாவின் கையெழுத்தைப் போட்டு எடுத்துவிடுவார் என்றும், கையெழுத்துப் போடக் கூடத் தான் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சென்றதில்லையெனவும், அனைத்து வேலைகளையும் அவர் கணவரே ஆட்களை வைத்துச் செய்து விடுவதாகவும் கூறுகிறார்.
சகுந்தலா கலெக்டர் ஆபீஸ் போன்ற இடங்களுக்கு கூட கணவரே சென்று வேலையை முடிக்கிறார் எனக் கூறும் போது இந்த விஷயம் அங்கு கலெக்டர் முதல் பொது மக்கள் வரை அனைவரும் அறிந்த ஒன்றே என்பதுடன் அது பற்றி எவரும் அக்கறை செலுத்தவில்லை என்பதும் புலனாகிறது.
அதனை மக்கள் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டதோடன்றி அவரது கணவரையே பிரெசிடெண்ட் என அழைக்கவும் செய்து கொடியேற்றம் முதலான நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கவும் அழைக்கின்றனர். இதைக் கேட்ட ரேவதி சகுந்தலாவிடம் தேர்தலில் நிற்க மாட்டேன் என உன் கணவரிடம் கூற வேண்டியது தானே எனக் கேட்க அது பயனில்லை எனக் கூறுகிறார் சகுந்தலா. எப்படியோ பிரெசிடெண்ட் எனப் பேருக்குத் தானே தவிர உண்மையில் அந்தப் பதவியும் அது தரும் அதிகாரமும், அவரது கணவருக்கு சுலபமாக கைமாற்றப் பட்டுவிடுகிறது. தேர்தல் அரசியலில் தன் பங்கேற்பு குறித்து சகுந்தலாவின் பேச்சுக்கு அவ்வீட்டில் சிறிதும் இடம் இல்லை. அவர் பங்கேற்க விரும்புகிறாரா இல்லையா என்பது அங்கு ஒரு கேள்வியே இல்லை. அவரின் கணவரின் விருப்பமும் முடிவுமே அங்கு செயல்பாடாக உருவெடுக்கிறது. அது மட்டுமன்றி பட்டம் பெற்ற தன் நிலையே இதுவென்றால் பள்ளி படிப்பே தாண்டாத ஆனால் வீட்டு ஆண்களால் பிரெசிடெண்ட் ஆக்கப்பட்ட பெண்களின் நிலை இதை விட மோசம் என்றே கூறுகிறார் சகுந்தலா.
இவ்வாறாக தங்கள் துயரங்களைப் பகிர்ந்த தோழிகள் பிரியும் வேளையில் சகுந்தலா ரேவதியிடம் சமாதானமாக ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கிளம்புகிறார். ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்பதாக அவர் இந்த துக்கமும் வலியும் எல்லா வீடுகளிலும் உண்டெனக் கூறி அதை இயல்பாக ஒதுக்கித் தள்ளி விட தன் தோழிக்குச் சொல்வதாக நினைத்துத் தன்னையும் தேற்றிக் கொள்கிறார். “நீ வீடென்றால் உன் கணவர் கதவு; உலகம் முழுக்க இப்படி தான்” எனக் கூறும் சகுந்தலாவை ரேவதி வீட்டில் உள்ள வெளிநாட்டு நாய் முறைத்துப் பார்ப்பதாகக் கதையை முடிக்கிறார் இமையம்.
இங்கு குடும்ப அமைப்பில் பெண் வீடாக அனைத்தையும் தாங்கிக் கொள்ள ஆண் கதவாக மட்டும் இருந்து அந்த வீட்டின் அடையாளமாக ஆக்கப்படுவதைக் குறிப்பாக உணர்த்துகிறார் கதாசிரியர். அத்துடன் இந்தச் சமூகத்தில் வீட்டின் எஜமானன் அந்த வீட்டு ஆண் தான் என கருதப்படுவதால் வீட்டு எஜமானனுக்கு விசுவாசமான அந்த நாய் எஜமானன் இல்லாத நேரம் அடிமை வேறொரு அடிமையுடன் சுதந்திரமற்ற நிலை குறித்து பேசியது தவறு என்ற ரீதியில் சகுந்தலாவை முறைத்து பார்த்ததாகவும் தோன்றச் செய்கிறது இந்த கதையின் முடிவில் வரும் அந்த வரி .
இந்தக் கதை நம் மனதில் எழுப்பும் கேள்விகள் நாம் நம் சமூகத்தில் பெண்களின் நிலை மாறி விட்டது எனக் கூறி வருவதை ஒரு நொடி நிறுத்தி மறுபரிசீலனை செய்யத் தூண்டுவதாய் உள்ளது. சம வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது மட்டுமே இங்கு அரசின் வேலை ஆகாது. அதையும் தாண்டி இங்கு ஒடுக்கப்பட்டவர்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையானச் சூழலை அமைத்துக் கொடுப்பதுடன், அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாதவாறு நிறைந்துள்ளத் தடைகளை நீக்கச் செய்திட வேண்டும்.
அது மட்டுமே இங்கு பெண் விடுதலையை உறுதிப்படுத்தும் எனக் கூறுவது அறியாமையே என்றாலும், அதுவும் சமத்துவம் நோக்கிய பயணத்தின் மிக முக்கியமான அம்சம் என்பதை மறுப்பதற்கில்லை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பெண்கள் தங்கள் நிலையை உணர்வதே ஆகும். படிப்பும் வேலையும் சம்பளமும் மட்டுமே தங்கள் நிலையை மேம்படுத்தாது என்ற புரிதலுடன், இந்தக் குடும்ப அமைப்பு என்றும் பெண் விடுதலையை சாத்தியப்படுத்தாது என்பதையும் புரிந்து கொள்வதே நம் இலக்கின் முதற்படியாக இருக்கக் கூடும். நமது கல்வி இந்தப் புரிதலைப் பெண்களுக்கு ஏற்படுத்தவில்லையெனில் பெண்கள் பெற்றுக் கொண்டு இருக்கும் இன்றைய கல்வியும் பயனற்ற ஒன்று தான். இத்தகைய சூழலில் கேலிப் பேசுவதை விடுத்து சமத்துவம் நோக்கிய இந்தப் பயணத்தில் அனைவரும் சேர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதே பெண்ணியவாதிகள் விரும்புவதாகும்.
Image Source: Trailer of short film Everything Is Fine
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address