பெண்ணின் பொறுமைக்கும் எல்லை உண்டு!

திருமணம் என்கிற கட்டமைப்பில், என்ன நடந்தாலும் சகித்துக் கொள்ளும் பெண்ணின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை மறக்கவேண்டாம்.

‘திருமணம் என்கிற கட்டமைப்பில், என்ன நடந்தாலும் பெண் சகித்துக் கொண்டு வீட்டுப் பெயரைக் காப்பாற்றவேண்டும்’ என்பவர்களே! பாதிக்கப்பட்ட பெண்ணின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை மறக்கவேண்டாம்.

திருமணம் என்பது இரு மனங்கள் இணைந்து அன்பின் ஒளியில், பரஸ்பர மரியாதை வகுத்த வழியில் நிகழ வேண்டிய ஒரு பயணம் அல்லவா?

‘இல்லை, கணவன் என்பவன் தலைவன்; பெண் அவனைச் சரணடைகிறாள். பெண்ணை அவன் ஆள்வதும், அதிகாரம் செய்வதும், காலப்போக்கில் பிள்ளைகள் பிறந்து அந்தப் பிள்ளைகளின் பொருட்டே அனைத்தையும் சகித்துக் கொண்டு பெண் வாழ்வதும் தான் திருமணம் எனும் வாழ்க்கை முறை ‘ என்பது தான் இந்த உறவு குறித்த புரிதல் என்றால், அந்தக் கட்டமைப்பே பிழையானது அல்லவா?

அனுசரிச்சு தான் போகணும்!?

“அட! என்ன நீங்க? எதுக்கெடுத்தாலும், ‘சமத்துவம், பெண்ணியம்’ன்னு சொல்லிட்டு…நம்ம பண்பாடு, கலாச்சாரம் ன்னு சில விஷயங்கள் இருக்கு. அதை அனுசரிச்சு தான் போகணும். ஊருக்குள்ள வாழ வேண்டாமா?” என்று கேட்கிறீர்களா?

உண்மை தான். அவரவர் எப்படி வாழ வேண்டும் என்கிற உரிமை, தேர்வு, தெளிவு எல்லாம் அவரவரைச் சார்ந்தது. ஆனால் வாழ்வதற்கு தானே இதை எல்லாம் பின்பற்ற வேண்டும்? இதை பின்பற்றுவதாலேயே வாழும் ஆசையே ஒருவருக்கு அற்றுப் போய்விட்டால்?

விஸ்மயா, ஜோதிஸ்ரீ… எங்கேயோ கேள்விப்பட்ட பெயர்களாக உங்களுக்கு தோன்றுகின்றனவா? வெவ்வேறு மொழி, வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களுக்கும் பொதுவானது, இவர்கள் இருவருமே மோசமான ஆணாதிக்கக் கட்டமைப்பில் விளைந்த திருமணம் என்கிற சிறைக்குள் சிக்கி பலியானது தான்.

சிறகொடிந்த கிள்ளைகள்

முன்னறிவிப்பு/ எச்சரிக்கை: இந்தப் பதிவில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள், உயிரிழப்பு பற்றிய குறிப்புகள் உள்ளன. உங்கள் மனநிலையை இது எந்த வகையிலேனும் பாதிக்குமெனில், இந்தப் பதிவை விட்டு இவ்விடமே வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

வெறும் 22 வயதே நிரம்பிய விஸ்மயா என்கிற (ஆயுர்வேத) மருத்துவ மாணவியின் மரணம், கேரளத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நாட்டையே உலுக்கியது என்று கூறினால் மிகையல்ல. திருமணம் ஆன ஒரு ஆண்டு காலத்தில் வரதட்சணை, குடும்ப வன்முறை எனக் கணவனாலும் அவனுடைய வீட்டாராலும் மிகுந்த வேதனைக்கு உள்ளான விஸ்மயா, கடந்த ஜூன் மாதத்தில் தன்னுடைய உயிரைப் பறிகொடுத்தார். நடந்தது தற்கொலையா அல்லது கொலையா என்கிற விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதுவாக இருந்தாலும், விஸ்மயா என்கிற வாழ வேண்டிய இளம்பெண் மீண்டும் திரும்பப் போவதில்லை என்பது மட்டுமே கசப்பான உண்மை.

‘நல்ல வரன்; அழகான மாப்பிள்ளை, நல்ல வேலை’ என்று எத்தனை கனவுகளுடன் விஸ்மயா திருமணம் என்கிற உறவுக்குள் நுழைந்திருக்க வேண்டும்? அது கானல் நீர் என்று தெரிந்த பின்னும், ‘ஊர் என்ன பேசுமோ‘ என்று எத்தனை வேதனையை அவள் பொறுத்து, அதுவே காலப்போக்கில் மரத்துப் போயிருக்கக் கூடும்? நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது.

இது தொடர்பான விசாரணையின் போது, “என் மனைவியை நான் அடித்திருக்கிறேன்” என்று ஒப்புக்கொண்டிருக்கிறார் விஸ்மயாவின் கணவர் கிரண்குமார்.

இந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள், அடுத்த அடி: ஜோதிஸ்ரீ என்கிற இளம் தமிழ்ப் பெண்ணின் மரணச்செய்தி.

டிசம்பர் 2020 இல் திருமணமான ஜோதிஸ்ரீ, கணவர் மற்றும் புகுந்தவீட்டார் வரதட்சணை கேட்டு இழைத்த தாங்க முடியாத கொடுமையில் உழன்று இருந்திருக்கிறார். எல்லா வீடுகளிலும் சொல்வது போல், கொடுமை தாங்காமல் பிறந்த வீட்டுக்கு அடைக்கலம் தேடி வந்த மகளை சமாதானம் செய்து மீண்டும் கணவனுடன் ‘வாழ’ அனுப்பி வைத்த அவளுடைய பெற்றோரை, இப்போது என்ன சொல்லித் தேற்றுவது?

தன்னுடைய மரணத்துக்கு முன், தன்னுடைய முடிவுக்கு தனது கணவனும், மாமியாரும் பொறுப்பு என்றும், ‘ஒரு தாலிக்காக எவ்வளவு தாங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது’ என்றும் கூறி மனமொடிந்த வீடியோ பதிவு ஒன்றைப் பதிந்து வைத்துவிட்டு சென்றிருக்கிறார், ஜோதிஸ்ரீ. இதற்கு மேலும் இது குறித்து விளக்கம் தேவையா? ஆற்றாமையில் நெஞ்சு அழல்கிறது.

இனியேனும் இது போன்ற இழப்புகள் தவிர்க்கப்படுமா?

இந்தத் துயர சம்பவங்கள் ஒரு புறம் இருக்க, மறுபுறம் ‘யார் வீட்டில் தான் இது நடப்பதில்லை? இதற்கெல்லாம் நொந்து போகலாமா?’ என்கிற பேச்சுகளும் தொடர்ந்தபடியே உள்ளன. ஆக, ‘எத்தனை பெண்கள் கண்ணீரில் கரைந்தாலும், உயிரையே இழந்தாலும், இந்தப் பிற்போக்கான திருமணம் சார்ந்த ஆணாதிக்க நடைமுறைகளை மாற்றிக் கொள்ள மாட்டோம்’ என்றே இன்னும் இருந்து வருகிறார்கள் பலர். இல்லையென்று அடித்துக் கூற நம்மில் எவர் உள்ளார்?

உயிரே போகும் வரையிலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்றால்… என்ன சொல்லி விளங்க வைப்பது?

எத்தனையோ வருடங்களாக தங்களிடம் கல்வி பயின்று வந்த மாணவிகளையே தகாத முறையில் பேசியும் பார்த்தும் சீண்டியும் நோகடித்த ஆசிரியர்களுக்கு இடமளித்த இந்த உலகம், பல காலமாகப் பெண்களை இழிவாகப் பேசி, பல கோடி சம்பாதித்து, மிகப் பிரபலமாக வலம் வந்த, சமீபத்தில் கைதான ‘பப்ஜீ’ மதன் என்பவருடைய ‘ஸ்டைல்’ ஐ மெச்சி வந்த இதே சமூகம், என்று ‘என்னால் இந்தத் திருமண ஏற்பாட்டுக்குள் வாழ முடியவில்லை; வலியும் பாரமும் தாங்க இயலவில்லை’ என்று தாய் வீடு தேடி, மறுபிறவி தேடி வரும் கல்யாண அகதிகளை கனிவோடு ஏற்றுக்கொள்ளப் போகிறது?

அந்த நாள் வருமானால், விஸ்மயா, ஜோதிஸ்ரீ போன்ற பெண்களின் இழப்புகள் அறவே தவிர்க்கப்படும்.
நம்பிக்கை வைப்போம்.

பட ஆதாரம்: Photo by Julia Volk from Pexels

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,432 Views
All Categories