23ஆம் குரோமோசோம் முதல் ’96’ திரைப்படம் வரை: பெயர் வெளியிட விரும்பாத வாசகி மனம் திறக்கிறார்!

எல்லாம் 23ஆம் குரோமோசோம் செய்யும் வேலை என்பது உங்களுக்கு தெரியுமா? பெண்கள், குறிப்பாக அம்மாக்கள், தயவு செய்து இதை வாசிக்கவும்!

பெயர் வெளியிட விரும்பாத வாசகி நான். என்னுடைய வாழ்வில் நடந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இங்கு பதிவு செய்கிறேன். எல்லாம் 23ஆம் குரோமோசோம் செய்யும் வேலை என்பது உங்களுக்கு தெரியுமா?

பெண்கள், குறிப்பாக அம்மாக்கள், தயவு செய்து இதை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு வயது 28 ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் எனக்கு. இரண்டும் பெண்ணாய் பிறந்ததால் என்னுடைய மாமியார் என்னை எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அதைச் சொல்லித் திட்டுவார்.

நான் இளநிலை வேதியியல் (கெமிஸ்ட்ரி) பட்டதாரி. எனக்கு அறிவியல் மிகவும் பிடிக்கும். ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தேடி விரும்பிப் படிப்பேன். அப்போது நான் நன்றாக புரிந்து கொண்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. ஏன், பள்ளிக்கூடத்திலேயே இது மாணவர்களுக்கு விளக்கப் படுகிறது.

23வது குரோமோசோம்!

ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதற்கு, பெண்ணுடைய கருமுட்டையுடன் இணைய வரும் ஆணின் உயிர் அணுக்களில், 23வது குரோமோசோம் ‘X’ ஆக இருந்தால் பெண் குழந்தையும், ‘Y’ ஆக இருந்தால் பெண் குழந்தையும் உருவாகும்.

கவனிக்க வேண்டியது என்ன என்றால் எல்லாப் பெண்களுக்கும் கருமுட்டையில் 23வது குரோமோசோமாக ‘X’ மற்றும் ‘X’ மட்டுமே இருக்கும்.

பெண்ணின் ‘X’ குரோமோசோமுடன் ஆணின் ‘X’ குரோமோசோம் இணைந்தால் கருவில் பெண் குழந்தை உருவாகும். இதுவே பெண்ணின் ‘X’ குரோமோசோமுடன் இணைவது ஆணின் ‘Y’ குரோமோசோம் என்றால், கருவில் ஆண் குழந்தை உண்டாகும்.

அப்படி இணைய வரும் ஆணின் இந்த குரோமோசோம் ‘X’ ஆக இருக்க வேண்டுமா, ‘Y’ ஆக இருக்க வேண்டுமா என்பதை நிர்ணயிக்கும் சக்தி அந்த பெண்ணுக்கோ ஆணுக்கோ இல்லை. அது இயல்பாக இயற்கை நடத்தும் ஒரு சேர்க்கை, அவ்வளவே.

ஆக மொத்தம், ஆணுக்கும் பெண்ணுக்குமான அடிப்படை வித்தியாசம், அவர்களது செல்களில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களில், கடைசி ஜோடி ‘XX’ ஆக உள்ளதா அல்லது ‘XY’ ஆக உள்ளதா என்பது தான்.

இந்த ஒரே ஒரு ‘Y’ குரோமோசோம் தான் வித்தியாசம். ஆனால் அந்த ஒரு வித்தியாசத்தை வைத்துக் கொண்டு ஆண்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரங்களும் மரியாதைகளும் நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. போகட்டும், அது வேற கதை.

இந்த அடிப்படை அறிவியல் தெரியாமல், என்னுடைய மாமியார் உட்பட பலர், பெண்ணைப் பெற்றால், அந்தக் குழந்தையின் தாயையே குறை சொல்கிறார்கள். எத்தனையோ பெண்கள் இதனால் மிகவும் கஷ்டப் படுகிறார்கள்.

பெண் குழந்தை ஒரு சுமையா?

இதற்கு ஒரு பெரும் காரணம், பெண் குழந்தையை ஒரு சுமையாகப் பார்ப்பது தான். “அவள் வளர்ந்து இன்னொருவன் கையில் ‘பிடித்துக் கொடுக்கும்’ வரை அவளுக்கு எந்த ‘மானபங்கமும்’ ஏற்படாமல் காக்க வேண்டும். காதலில் விழாமல், கற்பு கலையாமல் பாதுகாக்க வேண்டும்” என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

மானபங்கமா? பெண்ணுக்கு, அதிலும் வயது வித்தியாசம் இன்றி குழந்தை முதல் குமரி வரை பெண்ணுக்கு பாலியல் ரீதியான துன்பம் தருவது பெரும்பாலும் ஆண்களாகத் தானே இருக்கிறார்கள்?

அப்போது ஆண் பிள்ளைகளைத் தானே அவர்களது உணர்ச்சிகளை அடக்கப் பயிற்றுவிக்க வேண்டும்? மாறாக, பெண்களை வீட்டுக்குள் கட்டி வைப்பது ஏன்?

காதலில் விழுந்தால் என்ன? சாதி தடுக்கிறதா? இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி சாதியையே கட்டிக்கொண்டு அழப் போகிறோம்?

இதோ வந்து ஆட்டுவிக்கிறதே கொரோனா…அது ஒரு நுண்கிருமி. அது சாதி பார்க்கிறதா?

ஆனால் ஆறறிவு இருப்பதாக சொல்லிக் கொள்ளும் நாம் சாதி பார்க்கிறோம்!

‘நோய், மரணம், காதல், பசி எல்லாம் யாருக்கு வேண்டுமென்றாலும் வரும்’ என்று இயற்கை யுகம் யுகமாக நமக்கு சொல்லிக் கொடுக்கும் ஞானத்தை நாம் எப்போது உணரப் போகிறோம்?

’96’ படம் பார்த்து மனசுக்குள் அழுபவர்களாக எத்தனை பேர் இருக்கிறார்கள்? நம்முடைய மகள்களுக்கும் மகன்களுக்கும் இதே நிலை தோன்ற வேண்டுமா? சாதியை விடுத்து முன்னேறிச் செல்ல வேண்டிய காலம் இது!

பிள்ளைகளாவது அவர்கள் மனம்போல் வாழட்டும்!

என்னுடைய கணவர் வேறொரு பெண்ணை விரும்பினார். ஆனால் சாதியைச் சொல்லி அதற்கு தடை போட்டார்கள். அவரது சாதியிலும், அதிக வரதட்சணை கொடுத்ததால், என்னை ‘ஷார்ட்லிஸ்ட்’ செய்தார்கள்.

என் வீட்டிலோ, ‘மாப்பிள்ளை நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்’ என்று கூறி, சிங்கப்பூரில் ‘ஸ்காலர்ஷிப்’ உடன் மேல்படிப்பு படிக்க இருந்தவளை கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள்.

என்னுடைய ஆராய்ச்சி கனவுகளும், கணவரின் காதலும் ஒன்றாய் மடிந்தன. ஆனாலும் எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் உள்ளதால் வாழ்க்கை நகர்கிறது.

அந்தப் புரிதலும் இல்லாத பெண்களின் கதி? மாமியாருக்கும் பிடிக்காமல், கணவரின் அன்பும் கிடைக்காமல் இருந்தால் என்ன செய்வார்கள்?

போதும். சென்ற தலைமுறையினர் செய்த தவறுகளை எல்லாம் நாம் தொடர்ந்து செய்யாமல் இருப்போம். நம் பிள்ளைகளாவது அவர்கள் மனம்போல் வாழட்டும்.

இப்படிக்கு,
உங்களில் ஒருத்தி.

பட ஆதாரம்: ‘கருத்தம்மா’ திரைப்படம்

About the Author

Guest Blogger

Guest Bloggers are those who want to share their ideas/experiences, but do not have a profile here. Write to us at communi[email protected] if you have a special situation (for e.g. want read more...

2 Posts | 3,518 Views
All Categories