செவிலியர் என்பவர் செயல் வீரர்: அனுபவம் பேசுகிறார், செவிலியர் திருமதி பிரசன்னா சுதீர்

"சேவை செய்வதையே வாழ்வின் அர்த்தமாகக் கருதி பணிபுரிகிறோம்" என்கிறார், 33 வருடங்களாக செவிலியர் பணியாற்றிய திருமதி பிரசன்னா சுதீர் அவர்கள்.

இந்த செவிலியர் தினத்தன்று, 33 வருடங்கள் செவிலியம் புரிந்து, கன்னியாகுமாரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் செவிலியர் பயிற்சிக் கூடத்தின் பிரின்சிபால் (எ ) முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற திருமதி பிரசன்னா சுதீர் அவர்களது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

1979 ஆம் ஆண்டில் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் உடன் இணைந்த மருத்துவமனையில், அறுவை சிகிச்சைப் பிரிவில் செவிலியராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர், திருமதி பிரசன்னா அவர்கள்.

அதே மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பினில் தேர்ச்சி பெற்று, 33 வருடங்கள் அரும்பணி புரிந்து கடந்த 2017 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற இவர் தன்னுடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

செவிலியர் பணி குறித்த அனுபவங்கள்

“முதலில் எனக்கு நரம்பியல் துறையில் அறுவை சிகிச்சைப் பிரிவில் செவிலியராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களான டாக்டர். லோகமுத்து கிருஷ்ணன், டாக்டர். கல்யாணராமன், டாக்டர். ரங்கபாஷ்யம், டாக்டர். விக்டர் சாலமன் ஆகியோர் அருகில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

பிளாஸ்டிக் சர்ஜரியில் மிகச் சிறந்த மருத்துவ நிபுணராகக் கருதப்படும் டாக்டர் உல்லால் சுப்பராய் நாயக் அவர்களுடனும் இணைந்து பணிபுரிந்து இருக்கிறேன்.

ஆனால் உண்மையில் பெரும் பாக்கியமாக நான் கருதுவது, நான் அரசு மருத்துவமனைகளில் எளியவர்களுக்கு செவிலியம் புரிந்தது தான்.

எங்களுடைய பொறுப்பில் வரும் நோயாளிகளுக்கு சேவை செய்வதையே வாழ்வின் அர்த்தமாகக் கருதியே செவிலியர்கள் பணிபுரிகிறோம்.

என்னளவில் நான் என்னுடைய பொறுப்பில் வரும் நோய் வாய்பட்டவரை வேற்று மனிதராக பாவிக்காமல், அவர்கள் வீட்டில் ஒருவராகக் கருதும்படி மனமார அவர்களுக்கு அன்பும் கனிவும் கலந்து, இரவு பகல் பாராமல் கண்ணும் கருத்துமாய் சிகிச்சை அளித்து வந்திருக்கிறேன்.

சிகிச்சை அளிக்கப்படுபவருக்கு என்ன செய்ய வேண்டும், எந்த மருந்து, எத்தனை முறை, எதனை மணிநேரத்துக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தி செல்வர். அதை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, எங்களுடையது.”

இதயபூர்வமான சேவை

“இருதயவியல் எனப்படும் ‘கார்டியாலஜி’யின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ வார்ட் பகுதியில்) பணிபுரிந்த காலங்களில், இரத்தம் உறைந்து போகாமல் தடுக்கும் ‘ஹெப்பாரின்’ மருந்தினை சிகிச்சை பெறுபவருக்கு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை தவறாமல் போட வேண்டி இருக்கும்.

இதை நடைமுறைப்படுத்த, இரவு பகல் பாராமல், தவறாமல், குறித்த அளவில் ஊசி வழியாக செலுத்த வேண்டி இருக்கும். சிகிச்சை பெறுபவர் நள்ளிரவு வேளைகளில், நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் போது, அவரது தூக்கம் கெடாமல் ஊசி மூலம் மருந்து செலுத்தி வந்திருக்கிறேன். எந்த நிலையிலும் சிகிச்சை பெறுபவருக்கு எந்த தொந்தரவும், குறையும் இல்லாத வண்ணம் பார்த்து சேவை செய்து வந்துள்ளேன். நிச்சயமாக இதில் கிடைக்கும் மனநிறைவு அலாதி ஆனது.

மிகவும் எளிய பின்னணியில் இருந்து வரும் ஏழை மக்கள் பலருக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு நிறையவே அமைந்தது. பல நேரங்களில் நானும் என்னுடன் பணிபுரிந்த செவிலியச் சகோதரிகளும் எங்களுடைய பொறுப்பில் இருக்கும் நோய் வாய்பட்டவருக்கும் சேர்த்தே காலை உணவையும் எடுத்து வந்து விடுவோம்.

‘வெறும் வயிற்றில் மருந்து கொடுக்கலாகாது’ என்பதை மனதில் கொண்டே அவர்களுக்கும் சமைத்து எடுத்துக் கொண்டு வருவோம். நாங்களே அவர்களுக்கு உணவு புகட்டி, பின்னர் அளிக்க வேண்டிய மருந்துகளை அளிப்போம். இதயபூர்வமாக இதை நாங்கள் செய்து வந்திருக்கிறோம்.”

உறுதுணையாய் நின்ற குடும்பத்தினர்

“மருத்துவமனையும் எங்கள் பொறுப்பில் உள்ள சிகிச்சை பெறுபவர்களுமே எங்கள் உலகம் என்று பணி புரிந்தோம். இதைச் செய்வதற்கு துணையாக என்னுடைய கணவர், குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் இருந்தது என் பாக்கியம்.

எவ்வளவு தாமதமானாலும் என்னை மருத்துவமனையில் இருந்து இன்முகத்துடன் அழைத்துச் சென்று உறுதுணையாய் நின்ற என்னுடைய கணவர் திரு. சுதீர் அவர்களும், என்னுடைய பணி சார்ந்த பொறுப்புகளை உணர்ந்து, அவரவர் அளவில் பொறுப்புணர்வோடு படித்து, இன்று நல்லபடியாக உயர்ந்திருக்கும் என்னுடைய மகள் மற்றும் மகனும், எனக்கு கிடைத்த வரங்கள்.

என்னுடைய மாமியார் திருமதி. நாராயணி அவர்கள், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் தலைமை செவிலியராக இருந்தவர். எனது மாமனார் திரு. சங்கரநாராயணன் அவர்கள், அண்ணா நகரில் உள்ள இந்திய மெடிசின் மருத்துவமனையின் இயக்குனருக்கு தலைமை உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இருவருமே மருத்துவத் துறையில் இருந்ததால், அவர்கள் என்னையும் என்னுடைய பணியையும் முழுமையாக புரிந்து கொண்டு எனக்கு அன்பும் ஆதரவுமாக இருந்தவர்கள்.

சேவை செய்ய வேண்டும் என்ற என்னுடைய குறிக்கோளுக்கு ஏற்ப என்னுடைய குடும்பத் சூழலும் அமைந்ததால் என்னால் சிறப்புற பணியாற்ற முடிந்தது.”

பெண்ணுக்கு குறிக்கோள் வேண்டும்

“என்னைப் பொறுத்தவரையில், பெண்கள் தெளிவாக ஒரு குறிக்கோளை ஏற்று, அதற்காக முழுமனதுடன் முயன்றால், அவர்களால் அதை நிச்சயமாக அடைய முடியும். அது பணி சார்ந்தோ குடும்பம் சார்ந்தோ இருக்கலாம். ஆனால் அதில் பிடித்தமோடு இருப்பது முக்கியம். இது நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்த உண்மை.”

கொரோனா காலத்தில் சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்

“மருத்துவத் துறையில் பல ஆண்டுகள் செயலாற்றிய களப்பணியாளராக, இந்த கொரோனா காலத்தில் இதை வாசிப்பவர்களுக்கு சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்.

மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கும் உங்களைப் போலவே குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை என்று உள்ளது. உயிரை பணயம் வைத்து உங்களுக்கு அவர்கள் சேவை செய்வது ஒருபுறம். மறுபுறம், மருத்துவமனைகளில் நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட அளவிலான நோயாளிகளுக்கு மட்டுமே நல்ல முறையில் கண்ணும் கருத்துமாக சிகிச்சை அளிக்க முடியும்.

அளவுக்கு அதிகமாக நோயாளிகள் இருக்கும்போது அடிப்படை சிகிச்சை அளிப்பதற்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி ஏற்படுகிறது.”

கொரோனா வராமல் தடுப்பதே சிறப்பு

“இந்நிலையில் வருமுன் காத்து, கொரோனா வராமல் தடுப்பதே சிறப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

முடிந்த அளவு வெளியில் செல்லாதீர்கள். வீட்டிலேயே இருங்கள். இதனால் தொற்று உங்களுக்கு வரும் வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது. வெளியில் செல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தால், வீட்டிற்கு வந்து முறையாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அடிக்கடி வெளியில் சென்று வருபவர்கள் வாய்ப்பும் வசதியும் இருந்தால், முடிந்தால் உங்கள் வீட்டுக்குள்ளேயே உங்களை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள்.

தரமான முகக்கவசம் அணிவது முக்கியம். லேசான முகக்கவசம் மட்டுமே கைவசம் இருந்தால், இரண்டு முகக்கவசங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் வீட்டிற்கு உள்ளும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

சமூக இடைவெளியும் தொற்று அபாயத்தை குறைக்கும். வெளியில் சென்று வருபவர்கள், வீட்டிற்குள்ளேயும் இதை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். இதனால் நம்முடைய குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பார்கள்.

அடிக்கடி கைகளை நன்றாகக் கழுவுங்கள். கண், மூக்கு, வாய் பகுதிகளை அடிக்கடி தேவையில்லாமல் தொட வேண்டாம்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

நீராவி பிடிப்பது, அதாவது ‘ஸ்டீம் இன்ஹேலேஷன்’, இந்த சமயங்களில் நல்லது. காலை மாலை இரவு வேளைகளில் இதை செய்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.”

அனைவரும் நலமுடன் வாழ்வோமாக.

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,864 Views
All Categories