தமிழ் வளர்க்க வாசிப்பு அவசியமானது!

"தமிழ் வளர்க்கவும் குறுகிய மனப்பான்மையை மாற்றியமைக்கவும் வாசிப்பு அவசியமானது" என்கிறார், தமிழாசிரியர், திருமதி. விஜயா ஸ்ரீனிவாசன் அவர்கள்.

“வாசிப்பு என்பது தமிழ் வளர்க்க மட்டுமல்ல, மனித குல வளர்ச்சிக்கும் அவசியமானது. குறுகிய மனப்பான்மையை மாற்றியமைக்கும் சாவிகளே புத்தகங்கள்” என்கிறார் தமிழாசிரியர், திருமதி. விஜயா ஸ்ரீனிவாசன் அவர்கள்.

24 வருடங்கள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர், திருமதி. விஜயா ஸ்ரீனிவாசன் அவர்கள். மதுரை பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பில் தமிழைப் பாடமாக எடுத்து, முதல் மாணவியாக தங்கப் பதக்கம் வென்ற திருமதி விஜயா, தமிழ் வளர்க்க வாசிப்பு எவ்வளவு அவசியமானது என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

தமிழாசிரியர் திருமதி. விஜயா ஸ்ரீனிவாசன் அவர்கள்

தமிழ் வளர்க்க, வாசிப்பு ஏன் அவசியம் என்று கருதுகிறீர்கள்?

‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பர். அத்துடன் வாசிப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, எழுத்துப்பிழை இன்றி தமிழ் எழுத வாசிப்பு மிகவும் அவசியம் ஆகும்.

வாசிப்பு என்பது தமிழ் வளர்க்க மட்டுமல்ல, மனித குல வளர்ச்சிக்கும் அவசியமானது. குறுகிய மனப்பான்மையை மாற்றியமைக்கும் சாவிகளே புத்தகங்கள்.

‘நவில்தொறும் நூல்நயம்’ என்பது குறள். அது தான் புத்தகத்தின் சிறப்பு. புத்தகங்களை வாசிப்பவரின் மனம் புதிய செய்திகளை உள்வாங்கி, உருமாறி, உயர்கிறது. அதிலும் தமிழ் நூல்கள், அன்று தொட்டு இன்று வரை வாசிக்க வாசிக்க ஊறும் மணற்கேணி போன்றவை என்று சொன்னால் மிகையல்ல.

வாசிப்பு என்பது உங்கள் வாழ்வில் கொண்டுள்ள பங்கு பற்றி கூறவும்.

என்னுடைய குடும்பத்தினர் அனைவருமே வாசிப்பில் பெரும் ஈடுபாடு உடையவர்கள். என்னுடைய மாமனார் திரு. கிருஷ்ணன் நம்பி அவர்கள், ஒரு எழுத்தாளர் என்பதில் எப்போதும் எனக்கு தனிப்பெருமை உண்டு. பல சிறுகதைகளையும் குழந்தை இலக்கிய படைப்புகளையும் உருவாக்கிய அவர், பெருமதிப்பிற்குரிய திரு. சுந்தர ராமசாமி ஐயா அவர்களுடன் நட்பு பாராட்டிய சமகால எழுத்தாளர். அவரது எழுத்தில் உருவான குழந்தைகளுக்கான புத்தகமான ‘யானை என்ன யானை’ காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

என்னைப் பொறுத்தவரையில், வாசிப்பு ஒரு சிறந்த துணை. அதிலும், இந்த கொரோனா காலங்களில், புத்தக வாசிப்பு எனக்கு ஒரு வரமாக அமைந்திருப்பது உண்மை. நான் வாசிக்கும் புத்தகங்களின் சாரம் என் மனதில் ஊறி என் நேரத்தையும் வாழ்வையும் இன்னும் அர்த்தம் நிறைந்தவை ஆக்குகின்றன.

நீங்கள் வாசித்ததில் உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் எவை?

நான் வாசித்த எல்லாப் புத்தகங்களும் என் மீது ஏதோ ஒரு வகையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவற்றுள் முதலிடம் பெறுவது, ‘உலகப் பொது மறை’ என்று போற்றப்படும் திருக்குறள். அத்துடன் ‘ராஜகவி’ என்று நான் கருதும் பாரதியின் கவிதைகளும் எனது அபிமானத்தை வென்றவை.

“ரௌத்திரம் பழகு” என்றுரைத்த முன்டாசுக் கவிஞனின் வார்த்தைகள் தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்தவை. குழந்தைப் பருவம் தொட்டே தைரியம் அவசியம் என்று உணர்த்தும்படி பாடிய
‘பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா…’
என்கிற வரிகள் தான் இந்த காலத்திற்கு எவ்வளவு ஏற்புடையவை!

சமகால படைப்புகளுள் நான் சரித்திரப் புதினங்கள் தொடங்கி விறுவிறுப்பான ராஜேஷ்குமார் நாவல்கள் வரை வாசித்திருக்கிறேன்.

வாசிப்பு என்கிற களத்தைப் பொறுத்தமட்டில் பெண்களின் நிலை குறித்து நீங்கள் கண்டும் கேட்டும் அறிந்தது என்ன?

பொதுவாகவே, வாசிக்கும் பழக்கம் இருக்கும் பெண்கள் கூட ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் வாசிப்பை கைவிட்டதற்காக கூறும் முதற்காரணம், நேரமின்மை.

‘மதியம் என்ன சமைப்பது?’, ‘இவளுக்கு நாளை பரீட்சைகள் துவங்குகிறதே’, ‘மாமியாருக்கு உடம்பு முடியவில்லையே’, ‘சக்கரை சீக்கிரம் தீர்ந்துவிட்டதே’ என்று பெண்களுக்கு ஆயிரம் வேலைகள், நூறு சிந்தனைகள். இதில் வாசிப்பிற்கான தேடல் என்பது காணாமல் போய்விடுவது நிதர்சனம்.

இதை குடும்பத்தில் உள்ள ஆண்களும் குழந்தைகளும் புரிந்து கொண்டு, அவர்களும் சிறிது ஒத்துழைத்து, தத்தம் பங்குகளுக்கு வீட்டுவேலைகள், பொறுப்புகள் என்று பெண்களின் சுமையைக் குறைத்தால், பெண்களுக்கு தங்களுக்கான நேரம் கொஞ்சம் கிடைத்தால், வாசிப்பு சாத்தியமாகும்.

அனைவருக்கும் வாசிப்பு சாத்தியமாகட்டும்! தமிழும் வளமும் பெருகட்டும்!

பட ஆதாரம்: Pexels.com

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,448 Views
All Categories