சொல்ல மறந்த கதை: ‘தளபதி’ யைத் தாங்கிய பெண்கள்

மணிரத்னம் இயக்கி இளையராஜா இசையமைத்த, மறக்க முடியாத 'தளபதி' திரைப்படத்தில் இடம்பெறும் பெண்களின் சொல்ல மறந்த கதை இது.

“நட்பு ன்னா என்னன்னு தெரியுமா? ‘சூர்யா’ ன்னா என்னன்னு தெரியுமா?” என்ற மறக்க முடியாத ‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெறும் பெண்களின் சொல்ல மறந்த கதை இது.

‘தளபதி’. இல்லை, மாஸ்டர் படத்தை பற்றிப் பேசப் போவதில்லை. 1991 இல் மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில், ரஜினி-மம்முட்டி இணைந்து நடித்த, ‘கல்ட் மூவி’ என்று சொல்லப்படும், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘தளபதி’ திரைப்படம் பற்றியது இந்த பதிவு.

நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இந்த நேரத்தில் இது தேவையா?” என்று கேட்காமல், தயை கூர்ந்து மேற்கொண்டு படியுங்கள். சம்பந்தம் இருக்கிறது.

இன்று வரையிலும் கூட நட்பு என்றால் தேவா-சூர்யா தான் என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டு இருக்கிறது.
30 ஆண்டுகளுக்கு பின்னும் மறக்க முடியாத தமிழ்த் திரைப்படம், தளபதி. ஆனால் தேவா, சூர்யா, அர்ஜுன் ஐ.ஏ.எஸ்., வில்லன் கலிவரதன், போலீஸ் அதிகாரியாக வரும் கிட்டி, இவர்களைத் தாண்டி உங்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களின் கதை/கதி என்ன?

தேவா-சூர்யா அளவிற்கு பரவலாக பேசப்படாத, படத்தின், கதையின் தூண்களாக நின்ற ஸ்ரீவித்யா, கீதா, பானுப்ரியா மற்றும் ஷோபனா கதாபாத்திரங்களைப் பற்றிய ஒரு எளிய ரசிகப் பார்வையே இது.

கல்யாணி (ஸ்ரீவித்யா)

“சின்னத் தாயவள்” பாடல் காதுகளில் ஒலிக்க எழுதுகிறேன்.
ஒரு கட்டத்தில் கல்யாணியின் (ஸ்ரீவித்யாவின்) கணவராக வரும் ஜெய்சங்கர் சூர்யாவிடம் (ரஜினியிடம்) சொல்வார்:
“அவளுக்கு ஒரு பதிமூணு-பதினாலு வயசு இருக்கும். யாரோ செய்த பாவம். உன்னை கலைக்கவும் முடியாமல், வச்சுக்கவும் முடியாமல்…” என்று போகும்.

காட்சிகளின்றி வார்த்தைகளிலேயே எண்ணிப் பார்க்க முடிகிறதா, வன்கொடுமைக்கு உட்படுத்தப் பட்ட ஒரு சிறுமியின் வலியை, அதன் விளைவுகளை?

கல்யாணி, ஒரு இரும்பு மனுஷி. பருத்திப் புடவையில் எளிமையும் கம்பீரமுமாய், வடுக்களும் பரிவுமாய்…தனக்கு நேர்ந்த கொடுமையை, இழப்பினைத் தாண்டி, இன்னும் வாழ்க்கை இருக்கிறது என்று உணர்ந்து, ஒரு நல்ல மனிதரை மணந்து, ஒரு பிள்ளையை ஐ.ஏ.எஸ் அதிகாரிப் பணியில் அமரும் படி வளர்த்தவர். சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி தன் மூத்தப் பிள்ளையின் ஓயாத அழுகுரலில் இருந்து மீள முயன்றவர்.

சூர்யா தன் மகன் என்று தெரிந்த சில நொடிகளில், “அவன் நல்லவனா” என்று கலங்குபவர்; அவன் நல்லவன் தான் என்று அறிந்ததும் உவகையில் திளைப்பவர்.இறுதியில், இழந்து போன காலங்களை மீட்க, சூர்யாவுடனே இருந்து விடுபவர்.

என்ன ஒரு வைராக்கியம்! ஏதோ ஒரு வகையில் சீண்டலுக்கு, பாதிப்புக்கு உட்படும் பெண்களில் சிலர் அதை கடந்து வருவர்; சிலர் உடைந்து போவர். கடந்து வருவதன் சாத்தியங்கள் என்ன என்று வெளிச்சம் காட்டும் பாத்திரமாக நிற்பவர், கல்யாணி.

செல்வி (கீதா)

ஒரு ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் தேவாவின் நிழலாய் உறையும் மனைவி, செல்வி. தேவாவின் தோழியாய், சூர்யாவிற்காக கல்யாண சம்பந்தம் பேசும் தாயுள்ளமாய், அமைதியாய், ‘பொண்ணு ன்னா இப்படித்தான் இருக்கணும்’ என்று சொல்வார்களே, அது போல் வீடே உலகமாய் வாழும் ஒரு இல்லத்தரசி. கணவனை அனுசரித்து வாழும் பெண்.

தேவாவை போலீசார் கைது செய்ய வரும் கட்டத்தில், செல்வியின் பிள்ளை களைந்து போகும் காட்சி மெல்லிய ஊசியாய் கண்ணில் இறங்கும். அடுத்த சில காட்சிகளின் முடிவில், தேவா கொல்லப் படுகிறான்.

‘பொண்ணா லட்சணமா வீட்டை நல்லா பார்த்துக்கிட்டா போதும்’ என்பார்களே.. அப்படி வீடு, கணவன் தவிர வேறெதுவும் அறியாத செல்வியின் கதி? கேள்விக்குறியாகவே நின்று விடுகிறது.

வன்முறையை வீரம் என்றும், ஆண்மை என்றும் காலம்காலமாக போதிக்கப் பட்டு வரும் சமூகத்தில்,அதனால் பாதிக்கப் படும் பெண்களின் கதி பற்றி ஆழ்ந்த புரிதல் இருக்கிறதா?
டெஸ்டோஸ்டிரோன் தாக்கத்தில் களமாடி வாளும் வேலும் ஓய்ந்த கணவனை வீர மரணத்திற்கு தாரை வார்த்த பெண்ணின் மெல்லிய விசும்பல் சத்தமாக செல்வி கனன்று கொண்டு தான் இருக்கிறாள்.

பத்மா (பானுப்ரியா)

அதிகம் பேசாமல் அழுந்திப் பதியும் பாத்திரம். எடுத்தவுடன் கணவனை இழக்கிறாள்; தன்னந்தனியாக பிள்ளையை ஈன்று வளர்க்கிறாள். ஆண்கள் கோலோச்சும் சமூகத்தில் சீண்டல்களின் நடுவே தீயாய் வாழ்பவள், ஊருக்கு திரும்பி விட நினைக்கும் போது, அவளுக்கு அவளது கணவனைக் கொன்றவனையே உடையவனாக வரிக்கப் படும் காட்சியும் பின்னணி இசையும், மறக்க முடியாதவை.

அப்புறம் பத்மாவின் குழந்தைக்கும் சூர்யாவுக்கும் இடையில் மலரும் அந்த அழகான உறவு, பத்மாவே சூர்யாவும் அவனது தாயும் சேர வழி செய்வது என்று செல்கிறது கதை. ஆனால், சூர்யா தன் நெற்றியில் குங்குமம் இட்டபின், மகளைக் கூட்டிக் கொண்டு, சூர்யாவுடன் வாழச் செல்லும் பத்மாவின் முகத்தில் சிரிப்பும் இருக்காது, பயமும் இருக்காது. கோபம், வெறுப்பு என்று எதுவும் தெரியாது.
சிலை போல் செல்பவள், மருண்ட கண்களின் மிரட்சியில் சொல்லும் சேதி நூறு.

இங்கே பெண்களை சார்ந்து எடுக்கப்படும் பல முடிவுகள், பெண்களை கேட்டா எடுக்கப் படுகின்றன?

‘கன்சென்ட்’ என்று இன்று பரவலாகப் பேசப்படும் ‘பெண்ணின் சம்மதம்’ என்ன என்று நம் சமூகத்தில் எத்தனை பேருக்கு முழுமையாய் புரிகிறது? ‘நோ மீன்ஸ் நோ’ என்பதற்கு முன், “உனக்கு இது வேண்டுமா, இதில் சம்மதமா” என்ற கேள்வியின் முக்கியத்துவம் இங்கே நிறுவப்பட்டுள்ளதா?

“அது கெடக்குது கழுதை; அவளுக்கு என்ன தெரியும்” என்ற வாசகமாய், வாழ்க்கை பத்மாவை எங்கேயோ கூட்டிப் போகிறது.

ஒரு மிகப் பெரிய ஆறுதல், சூர்யா அவளிடம் “நான் வெறும் காவல்; உனக்கு, இந்த வீட்டுக்கு காவல்” என்று அவளது உணர்வுக்கு மதிப்பு கொடுத்து விலகி இருப்பது.
நட்புன்னா மட்டும் சூர்யா இல்லை; ‘கன்சென்ட்’ என்றாலும் சூர்யா தான் என்று பதிந்து கொள்ளுங்கள்!

சுப்புலக்ஷ்மி (ஷோபனா)

நதிக்கரையில் இயல்பாய் அழகாய் உதிக்கும் நேச தீபம் ஒன்று சாதீயத்தில் அணைந்து போகிறது.

நதிக்கரையில் பிரிவின் வாட்டத்தில் பாடும் வஞ்சியை கல்யாணி(ஸ்ரீவித்யா)க்கு பிடித்துப் போக, திருமணமும் முடிந்து விடுகிறது – கல்யாணியின் கலெக்டர் மகன் உடன்.

பிடித்தவனை மறந்து கரம் பிடித்தவனுடன் மூத்தோர் சொல்லுக்கு பணிந்து வாழத் துவங்குகிறாள், சுப்பு. “பாவம்.. ராதா.. ” என்ற ஸ்வரம் காதுக்குள் ஒலிக்கிறதா?

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்று சர்வ சாதாரணமாக பெண்களை ஏமாற்றுக்காரர்களாக சித்தரிக்கும் சம்பிரதாயம் தமிழ் சினிமாவில் காலம்காலமாக இருந்து வருகிறது.
‘தளபதி’ சுப்புலக்ஷ்மி முதல் ‘விண்ணைத் தாண்டி வருவாயா‘ ஜெஸ்ஸி வரை “அவனை என் பிணத்தின் மேல் நடந்து சென்று மணந்து கொள்” என்ற தந்தையின் வார்த்தை கட்டிப்போட்டு விடுகிறது. பெண்களின் இடத்தில் இருந்து யோசித்து, அவர்கள் கோணத்தில் இருந்து அனுபவிக்கும் தர்மசங்கடங்களை நம் ஊர் உணருமா?

என்றாலும், திருமணத்திற்கு முன் ‘ஐ.ஏ.எஸ்’ படித்த அர்ஜுன் (அரவிந்த்சுவாமி), “உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா” என்று ஒரு வார்த்தை கேட்டு, உண்மையை தெரிந்து கொண்டிருக்கலாம். ‘மின்னலே‘ கிளைமாக்ஸ் காட்சியில் அப்பாஸ் மாதிரி, “அவள் மனசுல நீ தான் இருக்க” என்று சூர்யாவுடன் சேர்த்துவைத்து இருக்கலாம். ஒரு நப்பாசை தான்!
மெத்தப் படித்த அதிகாரி கூட அவளது முழுமையான சம்மதத்தை கேட்கவில்லையே என்று ஒரு வருத்தம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ‘தன்னை மருமகள் ஆக்கிக் கொள்ள விரும்பிய மாமியாரின் மகன் தான் சூர்யா’ என்று அறிந்தவுடன் அவள் மனம் என்ன ஆகி இருக்கும் என்று நான் ஓவராக யோசிப்பது போல், நீங்களும் யோசிக்க வேண்டி வந்து விடுமே என்று இத்துடன் முடித்து கொள்கிறேன்.

பி.கு.: மேலே சொன்னது போல், நாட்டின், சமூகத்தின் நிலைமையையும் தொட்டு வைத்தேன் அல்லவா? வணக்கம்!

பட ஆதாரம்: YouTube

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,929 Views
All Categories