சேமித்தபின் எஞ்சியதைச் செலவிடுங்கள்!

சேமித்தபின் எஞ்சியதைச் செலவிட வேண்டும் என்ற நிலைப்பாடும் முறையான முதலீடுகளும் தேவைகளை சிறப்பாக கையாள உதவும் என்கிறார், சோனியா வர்மா .

சேமித்தபின் எஞ்சியதைச் செலவிட வேண்டும் என்ற நிலைப்பாடும் முறையான முதலீடுகளும் நமது பொருளாதாரத் தேவைகளை சிறப்பாக கையாள உதவும் என்று எழுதுகிறார், சோனியா வர்மா அவர்கள்.

APAC அல்லயன்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் பிராந்திய அக்கௌன்டிங் மற்றும் ரிப்போர்டிங் தலைமை அதிகாரியாக பணிபுரியும் சோனியா வர்மா சொல்கிறார்:

பிரபல முதலீட்டாளரும் பிசினஸ் அதிபருமான வாரன் பஃபெட் கூறுவது போல்

“செலவு செய்தபின் எஞ்சியதைச் சேமிக்காதீர்கள், ஆனால் சேமித்தபின் எஞ்சியதைச் செலவிடுங்கள்”

என்ற நிலைப்பாட்டினை ஏற்று செயல்படுவது நல்லது!

Original in English | மொழி பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

எனவே, உங்கள் பட்ஜெட்டை வெற்றிகரமாக திட்டமிட்டு நிர்வகிக்க,
வருவாய் – செலவுகள் = சேமிப்பு
என்ற நிலைப்பாட்டில் இருந்து
வருவாய் – சேமிப்பு = செலவுகள்
என்ற நிலைப்பாட்டிற்கு நீங்கள் மாற வேண்டும்.

வருமானத்துடன் முதலீடும் முக்கியம்

நம் வருமானத்தை பொறுத்தமட்டில் அது ஓரளவு தான் நம் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வு நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அது உண்மைதான். ஆனால் இது பொருளாதார ரீதியாக நம்மை முடக்கிப்போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வாரன் பஃபெட்டின் மற்றொரு பிரபலமான மேற்கோளை இங்கே சுட்ட விரும்புகிறேன்:

“ஒருபோதும் ஒற்றை வருமானத்தை மட்டும் சார்ந்து இருக்காதீர்கள். முதலீடு செய்யுங்கள், அதன் மூலம் இன்னொரு வருமானம் ஈட்டும் வழியை உருவாக்குங்கள்”

என்பதே அது.

முதலீடு என்றால் ‘பணம் சார்ந்த முதலீடுகள்’ மட்டும் அல்ல – இயல்பாகவே உங்களுக்குள் இருக்கும் திறமையை மேம்படுத்தியோ அல்லது புதிதாக ஒரு கலையையோ, திறனையோ கற்று வளர்த்துக் கொண்டோ அதன் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதும் முதலீடு தான் என்று நாம் உணர வேண்டும்.

உதாரணமாக, என் தோழி ஒருவர், மிகச் சிறந்த ஓவிய வேலைப்பாடுகள் செய்பவராக இருந்தார் – வீட்டளவில், ஒரு பொழுதுபோக்காக சிறந்த பல ஓவியங்களை மண்பாண்டங்கள், கண்ணாடிகள் என எல்லாவற்றிலும் துல்லியமாக தீட்டுபவர் அவர். என்றாலும் அதை முறையாக ஒரு பிசினஸ் ஆக செய்யவேண்டும் எனத் தோன்றவில்லை அவருக்கு.

தற்செயலாக ஒருமுறை அவரது வீட்டிற்கு வந்த விருந்தினர் சிலர் அவரது ஓவியம் மிகவும் பிடித்து போனதால் அதை அவர்களது வீட்டிற்கு வாங்கிச் செல்ல விரும்பினார். இது ஒரு திருப்புமுனையாக அமையவே, அவர் வாட்ஸ்-அப் மூலமாக இப்போது தன்னுடைய ஓவியங்களை விற்பனை செய்யும் பிசினஸ் ஒன்றினை சிறப்பாக நடத்தி வருகிறார்.

இது போலவே நீங்களும் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் திறமையை மூலதனமாகக் கொண்டு பிசினஸ் தொடங்கலாம்.
மாறாக, உங்களுக்கு விருப்பமான துறையில் உங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டு அதை முதலீடாகக் கொண்டும் தொழில் தொடங்களும் – உங்கள் இதில் அதீத ஆர்வம் உள்ளது என்று கண்டறிவது தான் இதற்கு முதல் படி.

போட்டோகிராபி, சமையல், சாப்ட்வேர் (எ) மென்பொருள் வடிவமைத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்: உங்களுக்கு சரியான துறையை தேர்ந்தெடுங்கள். உங்கள் திறமையை மெச்சி, உங்களது நற்பெயரையும் வியாபாரத்தையும் பரவலாக எடுத்துச்சொல்லும் நல்ல நண்பர் அல்லது உறவினர் நெட்வொர்க் (எ) குழுமத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்களும் பொருளீட்டத் துவங்கி விடுவீர்கள்!

தேவைகள், விருப்பங்கள் சார்ந்த செலவுகளை புரிந்து கொள்ளுங்கள்

அடுத்து, செலவில் கவனம் செலுத்தலாம். மீண்டும், வாரன் பஃபெட்டின் மேற்கோளுடன் தொடங்குகிறேன்:

“உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை நீங்கள் வாங்கிக் கொண்டே இருந்தால், விரைவில் உங்களுக்குத் தேவையானவற்றை கூட விற்க வேண்டிய நிலை வந்துவிடும்.”

இந்த ஆன்லைன் ஷாப்பிங் யுகத்தில், சில நேரங்களில் நாம் விரும்பும் பிராண்டுகளால், ஆன்லைன் தள்ளுபடி விளம்பரத்தால் தூண்டப்பட்டு மிகையாக செலவு செய்து விடுகிறோம்.

இது போன்ற செலவினங்களை நிர்வகிக்க எளிமையான வழி உள்ளது. அது கிரெடிட் கார்டு, ஆன்லைன் கட்டணம் செலுத்தும் தளங்கள் போன்றவை நமது செலவுகளை வரையிட்டு தொகுத்துக் காட்டும் கிராஃப் (எ) வரைபடங்களைப் பயன்படுத்துவது. செலவினங்களைக் கண்காணிக்க இது உதவுகிறது.

இவ்வாறு செலவுகளைக் கண்காணித்து அவசியமான செலவு, ஆடம்பரச் செலவு எனத் தரம்பிரித்து அவற்றுக்கான திட்டமிடல் என்பது உங்கள் நிதி முடிவுகள் சரியானதா அல்லது தவறானதா என்பதை தீர்மானிக்க உதவும்.

வீட்டுவசதிக்கான ஈ.எம்.ஐ (EMI), கல்வி, பொதுவான வீட்டுச் செலவுகள், வாகன பராமரிப்பு, பெற்றோரின் மருத்துவச் செலவுகள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் தவிர்க்கமுடியாத செலவுகள் போன்றவற்றிற்கு உங்கள் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்க வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

பின்னர் பானையில் எஞ்சியிருப்பதைப் பொறுத்து, பிராண்ட் ஷாப்பிங், பிரத்யேக உணவு மற்றும் உல்லாசப் பயணம் ஆகிய தனிப்பட்ட செலவுகளை வைத்துக் கொள்ளுங்கள்.

சேமிப்புகள் போக மிச்சத்திலேயே செலவழிக்க வேண்டும் என்ற கொள்கையை நினைவில் கொண்டு, சேமிப்பதற்கும் செலவு செய்வதற்கும் தனித்தனி பட்ஜெட்டுகளை வைத்திருங்கள், பின்னர் செலவு பட்ஜெட்டில் இருந்து மேற்கூறியவற்றை திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.

சில நேரங்களில் உங்கள் வரவு செலவுத் திட்டங்களை உங்களால் கண்காணிக்க முடியாமல் போகலாம். இந்தச் சூழலில் உங்கள் செலவுகளைக் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும், அவற்றை திறம்பட பயன்படுத்தவும் இன்று புழக்கத்தில் உள்ள பல எளிய ஆன்லைன் கருவிகள் / பயன்பாடுகள் ஆகியவற்றின் உதவியை நீங்கள் தகுந்த எச்சரிக்கையுடன் நாடலாம்.

சேமிப்பதற்கான எளிய, அதிகாரப் பூர்வமான வழிமுறைகள்

எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய திடீர் தேவைகளுக்காக பணத்தை சேர்த்து வைப்பதில் மட்டுமின்றி புத்திசாலித்தனமாக முதலீடு செய்து செல்வத்தை உருவாக்குவதிலும் உள்ளது. உங்கள் பணத்தைச் சேமிக்க எளிதில் அணுகக்கூடிய சில வழிகளை இங்கே பகிர்கிறோம். இந்த வழிமுறைகள் மூலம் உங்களுக்கு வில்லங்கம் இல்லாத வருமானம் கிடைக்கும் என்றாலும், உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கேற்ப நீங்கள் இவற்றை எச்சரிக்கையுடன் அணுகுதல் நல்லது.

குறிப்பு 1: இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு

சரியான இன்சூரன்ஸ் (எ) காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து உடல்நலம்/நோய் சார்ந்த எதிர்பாராத செலவைக் கட்டுப்படுத்தவும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சரியான நேரத்தில் சரியான காப்பீட்டுத் திட்டத்தில்பதிவு செய்து கொண்டு, செக் ஷன் 80 டி- யின் கீழ் வரிச் சலுகையை அனுபவித்துக் கொண்டே உங்கள் மருத்துவச் செலவுகளையும் செவ்வனே கையாளுங்கள். நீங்கள் உங்கள் காப்பீட்டில் இருந்து பணம் எதுவும் கோராத வரையில், ‘நோ க்ளெய்ம்’ பாயிண்டுகளை குவித்துக் கொண்டு பின்னொரு கட்டத்தில் பயனடைய முடியும்.

உடல்நலக் காப்பீடு என்பது ஆயுள் காப்பீட்டில் இருந்து மாறுபட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் எண்டோவ்மென்ட் நிதி மற்றும் லைஃப் கவர் (எ) ஆயுட்கால பாதுகாப்பும் வெவ்வேறு என்று தெரிந்து கொள்ளுங்கள். எண்டோவ்மென்ட் நிதிக்கு அதிக நிர்வாக செலவுகளுடன் மிகக் குறைந்த வரவும் அதிக பிரீமியமும் கிடைக்கும். ஆனால் லைஃப் கவர் மிகக் குறைந்த பிரீமியத்தை பெற்றுத் தருவது. லைஃப் கவர் என்பது பாதுகாப்புக்கான ஒரு கருவி அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு 2: மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்களில் திட்டமிட்ட முதலீடு செய்து, ஈக்விட்டி(equity) மற்றும் டெப்ட் (debt) எனப் பிரித்தறிந்து சமமாக தேர்வு செய்து குறைந்த ரிஸ்க் உடன் நல்ல பலன்களைப் பெறவும்.

குறிப்பு 3: வீட்டு முதலீடு அவசியம்

உத்தரவாதம் மற்றும் தரத்திற்கு பெயர் பெற்ற பில்டருடன் நீங்கள் முதலீடு செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ரியால்டி துறையில் அதிகரித்து வரும் தாமதம், மற்றும் தற்போதைய சூழல் என அனைத்தையும் மனதில் கொண்டு வீட்டு முதலீடு செய்பவர் கவனமாக இருக்க வேண்டும். அண்டர்-கன்ஸ்ட்ரக் ஷன் சூழலில் கொடுக்கப்படும் தள்ளுபடியை பார்த்து முதலீடு செய்யாதீர்கள். வேண்டாம். பின்னாட்களில் மட்டுமே உங்களுக்கு இந்த முதலீடு சார்ந்த வரிச் சலுகைகள் பெற முடியும் என்பதை மனதில் வைத்து அவசரப்படாமல் முடிவெடுக்கவும்.

குறிப்பு 4: தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்

தங்க நகைகளை வாங்குவது வேறு, தங்கத்தில் முதலீடு வேறு. நகைகளுக்கு அப்ரிசியேஷன் தோராயமாக சற்று குறைந்தே இருக்கும். வாங்கிய நகைகளை விற்றாலும் சேதாரத்தை கணக்கில் எடுப்பதால் வரவு குறைவு தான்.

மாறாக ஆபரணமில்லாத தங்கத்தில் முதலீடு செய்து 10 ஆண்டுகாலம் போன்ற காலவரையறையில் 10 சதவிகிதத்திற்கு மேலாக ‘ரிட்டர்ன்’களைப் பெற முடியும். தற்போது டிமேட் முறையில் தங்க சேமிப்புத் திட்டத்தின் மூலம் 3 சதவிகிதத்திற்கு மேலான வருடாந்திர வட்டியுடன் நல்ல அப்ரிசியேஷனும் கிடைக்கிறது.

குறிப்பு 5: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டம் (PF)

பி.எஃப் (எ) ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சேமித்தல் என்பது மிக முக்கியமான ஒன்று.
முறைப்படி, உங்கள் அடிப்படை சம்பளத்தில் 12% உங்கள் பிஎஃப் கணக்கிற்கு செல்கிறது (கூடுதலாக நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் தரப்பில் இருந்தும் 12% செல்கிறது).

இதில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது, உங்கள் பங்கை நீங்கள் 12% முதல் 88% வரை உங்கள் தன்னார்வ பி.எஃப் சேமிப்பு மூலம் அதிகரிக்கலாம் என்பது தான். இது உங்கள் பி.எஃப் கணக்கு பணம் என்பதால் வரி விலக்கு மற்றும் எந்தவொரு நிதி நிர்வாகமும் தேவையில்லை. இது உங்கள் சம்பளத்திலிருந்து தானாகவே கழிக்கப்படும். அல்லது ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ .150,000 முதலீடு செய்யக்கூடிய பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்கைத் திறக்கும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது.

ஒரு நாளைக்கு ரூ.410 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 40 லட்சம், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 66 லட்சம் மற்றும் 25 ஆண்டுகளில் 1 கோடி என வளர்ந்து வரும் (இந்த கணக்கீடுகள் 7.75% என்ற விகிதத்தில் செய்யப் பட்டுள்ளன). இது முற்றிலும் வரி இல்லாத வருமான வகையில் வரும். உங்கள் செலவுகள் அனைத்தையும் எளிதாக நிர்வகிக்க உதவும் இந்த நிதி. இது இருந்தால் உங்கள் ஓய்வூதிய இலக்குகளை நீங்கள் அடையவில்லை என்ற உணர்வு உங்களுக்கு ஒருபோதும் வராது.

முதலீட்டைப் பற்றிய வாரன் பஃபெட்டின் மேற்கோளுடன் இந்தக் கட்டுரையை நான் முடித்து கொள்கிறேன்:

“எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்க வேண்டாம்”

என்பதே அது! எனவே பல்வகைப்பட்ட ‘போர்ட்ஃபோலியோ’க்களில் முதலீடு செய்து, ரிஸ்க் காரணிகளை குறைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் பொருளாதாரத் தேவைகளை சிறப்பாக கையாளுங்கள்!

About the Author

1 Posts | 1,466 Views
All Categories