பிரியா ரமணி குற்றமற்றவர்: பெண்கள் பாதுகாப்பினை முன்நிறுத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

தகாத முறையில் நடந்து கொண்டவரை சுட்டிக் காட்டியதற்காக பிரியா ரமணியை தண்டிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்

‘தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டவரை சுட்டிக் காட்டியதற்காக ஒருவரை தண்டிக்க முடியாது’ என்று திட்டவட்டமாக அறிவித்து பத்திரிகையாளர் பிரியா ரமணியை மான நஷ்ட வழக்கிலிருந்து விடுவித்தது உச்ச நீதி மன்றம்.

இது இந்திய சமுதாயத்திற்கு கிட்டிய ஒரு திருப்புமுனை வெற்றி என்று சொன்னால் அது மிகையல்ல.

பத்திரிகையாளர் பிரியா ரமணி

20 வருடங்களுக்கு முன் ‘தி ஏஷியன் ஏஜ்‘ பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்த அக்பர், ஒரு வேலைவாய்ப்பு சார்ந்த நேர்காணலின் போது, அவருடைய தனி அறையில் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றார் என்று “மீ டூ” பின்னணியில் வெளிப்படுத்தியிருந்தார், பத்திரிகையாளர் பிரியா ரமணி. இது நடந்தது 2018 ஆம் ஆண்டில்.

இதைத் தொடர்ந்து, ‘தன் மீது ஆதாரமற்ற பாலியல் புகார் கூறி தன்னுடைய நற்பெயரையும் கௌரவத்தையும் கெடுத்து விட்டார், பிரியா ரமணி,’ என்று ஆளுங்கட்சி உறுப்பினரும் முன்னாள் மந்திரியுமான எம்.ஜெ. அக்பர் தொடுத்த மான நஷ்ட வழக்கிலிருந்து பிரியா ரமணியை நேற்று விடுவித்தது உச்ச நீதி மன்றம்.

பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை, கௌரவம் கருதி, வெளியில் சொல்வதில்லை. இந்நிலையில், பெண் ஒருவர் தைரியமாக தனக்கு நேர்ந்ததை வெளிப்படையாக சொல்கிறார் என்றால், அதில், சந்தேகப்பட தேவையில்லை” என்று கூறியுள்ளார், இந்த தீர்ப்பினை அளித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் பாண்டே அவர்கள்.

வழக்கின் பின்னணி

‘நானும் பாதிக்கப்பட்டேன்’ என்று பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய ‘மீ டூ’ மூவ்மெண்ட் (#MeToo movement) பின்னணியில், 2018 ஆம் ஆண்டில், முன்னாள் பத்திரிகையாளரும், இந்நாள் அரசியல்வாதியுமான எம். ஜெ. அக்பர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதை வெளிப்படுத்தினார், பத்திரிகையாளர் பிரியா ரமணி.

பிரியா ரமணியின் இந்தச் செயலைத் தொடர்ந்து மேலும் சில பெண் பத்திரிகையாளர்களும் அக்பர் மீது, பாலியல் புகார் கூற மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானார் அக்பர்.

எம். ஜெ. அக்பர் (Source: PTI )

2018 ஆம் ஆண்டில் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகியவர், புது டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், பிரியா ரமணிக்கு எதிராக, மான நஷ்ட வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

‘பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான வன்முறைகள், பூட்டிய அறைகளுக்குள் நடைபெற்று விடுகின்றன. இந்நிலையில் ஆதாரம் இல்லை என்ற துருப்புச் சீட்டை வைத்துக் கொண்டு, எந்த அத்துமீறலும் நடக்கவே இல்லை என்பதை நிறுவ முடியாது’, என்ற நிலைப்பாட்டில் உச்ச நீதிமன்றம் வழக்கில் பிரியா ரமணிக்கு சாதகமான தீர்ப்பினை அளித்து, அவரைக் குற்றமற்றவர் என்று அறிவித்தது.

பிரியா ரமணிக்காக வாதாடிய சீனியர் அட்வகேட் ரெபெக்கா ஜான்

சீண்டலில் பேதம் கிடையாது

‘பாலியல் துன்புறுத்தலுக்கு பெண்கள், ஆண்கள், திருநங்கைகள், திருநம்பிகள், குழந்தைகள் என எந்த பேதமும் கிடையாது’ என்று சொல்லக்கூடிய சங்கடமான சூழலில் வாழ்ந்து வருகிறோம்.

பாலினம், இன, மத, மொழி வேறுபாடின்றி எல்லாக் காலங்களிலும் யாரோ ஒருவர் பாலியல் ரீதியான சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாக்கப்படுகிறார்.

இதில் பெரும்பாலானோர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவரை சுட்டிக் காட்டாமல் உள்ளுக்குள்ளேயே நொந்து மன, உடல் ரீதியாக பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு பயந்தே நிறுவப் பட்ட பெண்ணடிமை வழக்கங்கள்

பெண்களை முடக்கி வைத்திருக்கும் நம் சமூக வழக்கங்கள் எல்லாம் அடிப்படையில், இந்த பாலியல் சீண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு பயந்தே நிறுவப் பட்டவை என்று சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா?

இதனால் தான் பிரியா ரமணி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு நமக்கு கிடைத்த இன்றியமையாத வெற்றி ஆகிறது.

“இனி பாலியல் ரீதியாக யாரையும் சீண்டினால் மூடி மறைக்க முடியாது. தான் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்பட வேண்டி வரும். பெயர், புகழ், மரியாதை, குடும்ப கௌரவம் என அனைத்தும் கெடும்” என்று அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டிய நிலை அத்துமீற நினைப்பவருக்கு ஏற்பட்டால், பாதி கொடுமைகள் தானாக ஒழிந்து விடும்.

பாதிக்கப் பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி

எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு பணம், புகழ், அந்தஸ்து இருந்தாலும், அரசியல் செல்வாக்கு, குடும்பப் பின்னணி என எதுவாக இருந்தாலும், சட்டத்தின் பார்வையில் தவறு செய்தவர் ஒரு சாதாரண பிரஜை தான்.

தவறு செய்தவருக்கு எவ்வித சிறப்புச் சலுகையும் அளிக்காது, நடுநிலையோடு தன் கடமையைச் செய்யும் வல்லமை சட்டத்திற்கு உண்டு என்பதை உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு நிறுவியுள்ளது.

இது வெற்றி தான். ஆனால் இது இன்னும் முழுமை அடைய வேண்டும்.

“பிரியா ரமணி போன்ற படித்த, தைரியமுள்ள, உயர்ந்த பணியிலுள்ள பெண்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினருக்கும் இந்த நம்பிக்கை ஏற்பட வேண்டும். ஏழையாக இருப்பதோ, சாதி ரீதியாகவோ, படிப்பு, பணி எனத் தகுதி சார்ந்தோ யாருக்கும் இந்த வாய்ப்பு மறுக்கப் படக்கூடாது” என்று இது குறித்து கூறியுள்ளார், ‘தி ஜென்டர் செக்யூரிட்டி ப்ராஜெக்ட்‘ அமைப்பின் நிறுவனரும், சென்னையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் சட்டக் கலை பயின்றவருமான கீர்த்தி ஜெயக்குமார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்கும் நிலை வந்தால், ஒரு நாள் பாலியல் கொடுமை என்பது பெருமளவில் குறையக் கூடும்; ஏன், வழக்கொழிந்து போகக் கூடும்.

அந்நாள் வருவதாக. சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் மக்கள் கொண்ட நம்பிக்கை வளர்வதாக.

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,962 Views
All Categories