கமல்ஹாசன் ட்விட்டர் சர்ச்சை: நீங்க நல்லவரா? கெட்டவரா?

கமல்ஹாசன் அவர்கள் 'பெண்களுக்கு நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அவரவர்களே பொறுப்பு' என்ற பொருள்பட வெளியிட்ட ட்வீட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில், திரு. கமல்ஹாசன் அவர்கள் ‘பெண்களுக்கு நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அவரவர்களே பொறுப்பு’ என்ற பொருள்பட வெளியிட்ட ட்வீட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ட்விட்டர் என்ற ஒரு மெய்நிகர் (virtual) உலகத்தில் பரபரப்பாக வலம் வரும் திரு. கமல்ஹாசன் அவர்கள், கடந்த சில ஆண்டுகளாகவே சில ‘ட்வீட்’களை பதிவிட்டு கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வந்திருக்கிறார்.

திரைத்துறை, அரசியல் என பல களங்கள் கண்ட திரு. கமல்ஹாசன், தன்னுடைய கருத்துகளுக்காக எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் வாரிக் குவித்து கொள்வது வழக்கமான ஒன்று.

சமீபத்தில், கடந்த ஜனவரி 2, 2021 அன்று அவர் வெளியிட்ட ட்வீட் ஒன்று, பெண்கள் பத்திரமாய் இருப்பதும் தாக்கப் படுவதும் அவர்கள் கண்ணியம் மற்றும் சமநிலையோடு இருப்பதில் தான் இருக்கிறது என்ற தொனியில் அமைந்து, நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

சர்ச்சையான ட்வீட்: கண்ணியம் மற்றும் சமநிலை?!

ஆங்கிலப் புதுவருடப் பிறப்பன்று ஸ்னேஹா மோகன்தாஸ் என்ற பெண், ட்விட்டரில் தன்னுடைய தற்காப்பு செயல்முறை வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். இவர் கடந்த வருட மகளிர் தினத்தன்று பிரதமர் மோடியின் ட்விட்டர் ஹாண்டில்-ஐ கையாளும் வாய்ப்பு பெற்ற, சென்னையில் ‘ஃபுட் பாங்க்’ என்ற பசியில் வாடுவோருக்கு உணவு வழங்குவதை செவ்வனே செயலாற்றிய என்.ஜி.ஓவின் நிறுவனர் ஆவர். இவர் தனது ட்வீட்டில்,
“உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, (பெண்களாகிய) உங்களை அதிக அச்சமின்றியும் அதீத சுதந்திரத்துடனும் வாழ அதிகாரம் அளிக்கிறது #சுதந்திரம் #வீட்டுவன்முறையிலிருந்து_விடுதலை #தற்காப்பு_முறைகளை_கற்றுக்கொள்ளுங்கள்”
என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த ட்வீட் பதிவை மேற்கோளிட்டு,

“வீட்டு வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க (பெண்களின்) ‘கண்ணியம் மற்றும் சமநிலை’ மட்டுமே போதும். ‘பெப்பர் ஸ்ப்ரே’வை விட, உங்களது நம்பிக்கை குற்றம் இழைப்பவர்களுக்கு அதீத சேதத்தை ஏற்படுத்தும்”

என்று கருத்திட்டு இருக்கிறார் திரு. கமல்ஹாசன்.

இவ்வாறாக, பெண்கள் அஹிம்சயை ஆயுதமாகக் கொள்ள வேண்டும் என்று பேசி இருக்கிறார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர்.

இந்த கருத்தின் எதிரொலியாக திரு. கமல்ஹாசன் முன் வைக்கப்பட்டுள்ள கேள்வி எளிமையான, வெளிப்படையான ஒன்று:

வன்மத்தால், மூர்க்கத்தால் தூண்டப்பட்டு அடிப்படை மனிதத் தன்மையை இழந்து, வீட்டிற்கு உள்ளோ வெளியிலோ பெண்ணைத் தாக்கும் ஒரு நபருக்கு எதிராக அஹிம்சை, கண்ணியம் மற்றும் சமநிலை எந்த அளவு எடுபடப் போகிறது?

இதனால் தாக்கப்பட்ட பெண்களுக்கு சொல்ல வருவது?

பெண்களின் உண்மையான நிலை பற்றிய, நாட்டின் நடைமுறை சூழ்நிலை பற்றிய முழுமையான புரிதலின்மையையும் இதன் மூலம் கமல் வெளிப்படுத்தி உள்ளதாக பலர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
ஏற்கனவே 2014ஆம் ஆண்டில் ஒரு நேர்காணலில் “மனசு சுத்தமாக இருக்கும் பட்சத்தில் யாரும் கிட்ட வர மாட்டார்கள்” என்று கமல்ஹாசன் கூறி இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறு குழந்தைகளை கூட வன்புணர்வு செய்யும் இந்த காலகட்டத்தில், ‘குற்றம் செய்பவர்கள் சூழ்நிலையால் உந்தப் படுகிறார்கள் என்றும் பெண்களுக்கு நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு பெண்களே பொறுப்பு‘ என்றும் பெண்கள் தலையிலேயே அனைத்தையும் கமல்ஹாசன் கிடத்தி இருப்பதாக பலர் கருத்திட்டு உள்ளனர்.

அஹிம்சையின் உயர்வும், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதும் எல்லோரும் அறிந்ததே. ஆயினும் எல்லா சூழ்நிலைகளிலும் இது பொருந்துமா?

“அப்படியானால் தாக்கப்பட்ட பெண்கள் அனைவரும் கண்ணியமும் சமநிலையும் தவறியவர்கள் என்று சொல்கிறீர்களா?” என்று கொதிப்புடன் கேள்வி எழுப்பி இருக்கிறார் இன்னொருவர்.

டேமேஜ் கண்ட்ரோல் (எ) திருத்தம்?

இந்நிலையில், தான் வெளியிட்ட இந்த கருத்தினால் ஏற்பட்ட சேதத்தை குறைக்கும் வழிகளில் ஈடுபட்ட கமல்ஹாசன், தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும் விதமாக

“‘கண்ணியமும் சமநிலையும் ஆண்களுக்கு வேண்டும்’ என்பதையே நான் கூறியுள்ளேன். அதை தவறாக புரிந்து கொள்ளப் பட்டுவிட்டது.”
பெண்கள் தற்காப்புக் கலைகளைப் பயின்று தயாராக இருப்பது நல்லது தான். அதை விட முக்கியமாக, தாய்மார்கள் அவர்களது மகன்களுக்கு பெண்களிடம் கண்ணியத்துடனும் சமநிலையுடனும் நடந்து கொள்ள கற்பிக்க வேண்டும்

என்று ‘இந்தியா டுடே’விற்கான ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இவ்வாறு கூறியவுடனேயே “தாய்மார்களுடன் தந்தைமார்களுக்கும் அந்த பொறுப்பு இருக்கிறது” என்று அவ்விடமே அவரைத் திருத்திய ஊடகவியலாளர் ப்ரியம்வதாவிற்கு நம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதுடன் நாம் கமல்ஹாசனிடம் கேட்க விரும்புவது இதைத் தான்:

பட ஆதாரம்: YouTube

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,865 Views
All Categories