2020இல் தடைகளை மீறி செய்வன திருந்தச் செய்த ‘சபாஷ்’ பெண்கள்!

2020இல் கோவிட்-19 ஏற்படுத்திய இறுக்கமான சூழலிலும் செய்வதை செவ்வனே செய்த பெண்களுக்கு 'சபாஷ்' சொல்லும் குட்டி முயற்சியே இது!

2020இல் கோவிட்-19 ஏற்படுத்திய இந்த இறுக்கமான சூழலிலும் செய்வதை செவ்வனே செய்த பெண்களுக்கு ‘சபாஷ்’ சொல்லும் ஒரு குட்டி முயற்சியே இது!

மொத்த மனித இனத்தையும் பாரபட்சமின்றி பூட்டிவைத்த 2020ஆம் ஆண்டு ஒரு வழியாக விடைபெறத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ‘காற்றுக்கென்ன வேலி’ என்று இந்த ஆண்டிலும் முத்திரை பதித்த பெண்கள் சிலரை பார்ப்போம், வாருங்கள்!

கீதாஞ்சலி ராவ்

பதினைந்து வயதான இந்திய-அமெரிக்கப் பெண்ணான கீதாஞ்சலி ராவ் டைம் பத்திரிகையால் 2020ற்கான ‘ஆண்டின் சிறந்த குழந்தை’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘ஆண்டின் சிறந்த குழந்தை’ என்ற பிரிவில் டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்கிற பெருமையை அடைந்துள்ள கீதாஞ்சலி ராவ், ‘cyber-bullying’ எனப்படும் இணையவழி சீண்டல் மற்றும் நீர் மாசுபாடு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் ஆவார்.

இந்த இளம் விஞ்ஞானி பல்வேறு பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து 30,000 மாணவர்களுக்கு ‘mentor’ எனப்படும் வழிகாட்டியாக இருந்துள்ளார் என்பது பெருமிதத்திற்கு உரிய ஒன்றாகும்.

கேரள அமைச்சர் கே கே ஷைலஜா

கோவிட் 19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டதில் கேரள சுகாதாரம், சமூக நீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரான கே கே ஷைலஜா அவர்களின் முயற்சிகள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக பேசப்பட்டது. கொரோனா தொற்று கேஸ்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவர் கையாண்ட வழிமுறைகள் உலகளவில் பிரபலம் அடைந்தன.

ஒரு கட்டத்தில் அவரது செயல்திட்டம் கேரளாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வந்து, அவருக்கு ‘தி கொரோனா வைரஸ் ஸ்லேயர்’ என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. முன்னதாக ஜூன் மாதத்தில் இவர் ஐ.நா.வினால் அவரது சிறப்பான பணிக்காக கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனல் போசலே

கோவிட் 19 இன் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சித்து வெற்றி கண்ட மற்றொரு இந்தியப் பெண்ணான மீனல் போசலே, இந்தியாவின் முதல் கோவிட் 19 சோதனைக் கருவியின் உருவாக்கத்திற்கு காரணமானவர் ஆவார். வைராலஜிஸ்ட் ஆன போசலேவின் பத்து விஞ்ஞானிகள் கொண்ட குழுவில் ஒன்பது பேர் பெண்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். மார்ச் மாதத்தில் இந்தியாவின் முதல் சோதனைக் கருவியை ஆறு வார காலத்திற்குள் வடிவமைத்து சாதனை படைத்தனர், இந்த விஞ்ஞானக் குழுவினர்.

கேப்டன் ஸ்வாதி ராவல்

இந்த நாவல் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது முன்னணியில் நின்று மீட்புப் பணியில் ஈடுபட்ட கேப்டன் ஸ்வாதி ராவல், உலகளாவிய லாக்டவுனின் முதல் கட்டத்தில் ரோம் நகரில் சிக்கிய 263 இந்திய பயணிகளை வெற்றிகரமாக மீட்டார். இதன் மூலம், மீட்பு விமானத்தை இயக்கிய முதல் சிவில் பெண் விமானி என்ற பெருமையை அடைந்தார், கேப்டன் ராவல்.

இளவேனில் வாலறிவன்

இந்த ஆண்டு நடந்த ஷேக் ரஸ்ஸல் சர்வதேச ஏர் ரைஃபில் சாம்பியன்ஷிப் (Sheikh Russel International Air Rifle Championship) போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் கடலூரைச் சேர்ந்த 21 வயது இளவேனில் வாலறிவன், 2020ஆம் ஆண்டிற்கான FICCIயின் ‘சிறந்த விளையாட்டு வீரர்’ விருதினை துப்பாக்கிச் சூட்டு விளையாட்டுப் பிரிவில் பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். இளவேனில் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகளவில் அசத்திய நம்ம ஊர் பெண்கள்

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ், சமீபத்தில் நியூசிலாந்து அமைச்சரவையின் ‘இந்திய வம்சாவளியில் வந்த முதல் அமைச்சராக’ இடம்பெற்ற பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உலக இயக்கத்தில் இந்திய வம்சாவளிப் பெண்களின் பங்களிப்பை பறைசாற்றியுள்ளனர்.

இத்துடன் 2020ஆம் ஆண்டிற்கான பிபிசி 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள எழுச்சியூட்டும் இந்திய பெண்களான ‘ஷாஹீன் பாக் கி தாதி’ (பாட்டி) என்றழைக்கப் படும் 82 வயதான பில்கிஸ் பானோ, ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்‘ இசைக்குழுவின் ஒரே பெண் உறுப்பினரான இசைவாணி, பாரா-இந்திய விளையாட்டு வீரரான மானசி ஜோஷி, மற்றும் பருவநிலை மாற்றம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் 12 வயது ரித்திமா பாண்டே ஆகியோர் உலகளவில் நம்ம ஊர் பெண்கள் அசத்திக் கொண்டு இருப்பதற்கு சாட்சியாக நின்று நம்மையும் தலைநிமிரச் செய்துள்ளார்கள்!

‘ஹவுஸ் வைஃப்’களுக்கும் அத்தியாவசிய சேவை வழங்குநர்களுக்கும் ஜே!

‘வீட்டில் சும்மா தான் இருக்கிறாள்’ என்று பட்டம் வாங்கிக் கொண்ட பெண்களெல்லாம் சத்தமின்றி எவ்வளவு உதவிகளை எதிர்பார்ப்பின்றி, பெருந்தன்மையாக செய்கிறார்கள் என நம்மில் பலருக்கு இந்த ஆண்டில் விளங்கியிருக்கும். சளைக்காமல் இவ்வளவையும் செய்த, செய்து கொண்டிருக்கும் நம் இல்லத்து பெண்கள் அனைவரையும் அங்கீகரித்து அணைத்து கொள்ள வேண்டிய நேரம் இது!

லாக்டவுன் சமயத்தில் வெளியில் செல்ல முடியாத சூழலிலும் உயிரை பணயம் வைத்து நமக்கான அத்தியாவசிய சேவைகளையும், உணவு, மருந்து போன்ற இன்றியமையாத பொருட்களையும் முடிந்தவரை தடையின்றி கிடைக்க வழிவகுத்த அத்தனை நபர்களுக்கும் நன்றி கூற நாம் கடமைப் பட்டுள்ளோம்.

மருத்துவ, செவிலிய சகோதரிகளுக்கும், இந்தச் சூழலிலும் தொடர்ந்து பணியாற்றிய அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் பணிவுடன் வணக்கம் சொல்லி வாழ்த்துவதில் நிறைவு கொள்வோம்.

(தலையங்கப் படத்தில் இருப்பவர் இந்தியத் துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு வீரர் இளவேனில் வாலறிவன்.)

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,891 Views
All Categories