சில விஷயங்களுக்காக 2020க்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்

பலருக்கு ‘சபிக்கப்பட்ட’ ஆண்டாகவே அமைந்துவிட்ட 2020க்கு சில விஷயங்களுக்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்!

பல வகையில் பல மனிதர்களுக்கு ‘சபிக்கப்பட்ட’ ஆண்டாகவே அமைந்துவிட்ட 2020க்கு சில விஷயங்களுக்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்!

ஏதோ ஒரு வகையில் எங்கள் வாழ்க்கையை திசைமாற்றி மொத்த உலகத்தையும் ஸ்தம்பித்து நிற்க வைத்தாய்! அல்லும் பகலும் கவலைகளையும் நடுக்கத்தையும் கொடுத்தாய். என்றாலும், என் மக்களுக்கு நீ செய்த சேதத்தையும் மீறி உனக்கு நன்றி கூற விழைகிறேன், 2020ஆம் ஆண்டே!

Original in English | மொழி பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

எதை யார் மறுத்தாலும் நிச்சயமாக மனித தாக்குதலில் இருந்து மீள இயற்கைக்கு நீ ஒரு அருமையான வாய்ப்பு அளித்தாய், அதற்கு உனக்கு நன்றி!

அவசியம் எது, பேராசை எது என்று விளங்க வைத்தாய்!

நான் யார், என் தேவை என்ன என்பதை எனக்கு தெளிவாகக் காட்டினாய், நன்றி! உண்மையிலேயே எனக்கான, அந்த குடும்பத்திற்கான அடிப்படை தேவை எது என்பதை பகுத்துணர வைத்து எங்கள் ஆடம்பரங்களை, பதுக்கல்களை சற்றே நிறுத்தி வைக்க வாய்ப்பளித்தாய்.

குடும்பத்திற்கு தேவையானதை மட்டுமே வாங்கினேன்; என் ஆசீர்வாதங்களை எண்ணி எண்ணி நன்றி சொன்னேன். பேராசையிலிருந்து எங்களை மீட்டதற்கு நன்றி!

போற்றுதற்குரிய அடிப்படை சேவை வழங்குநர்கள்

இது வரை பேரளவில் கொண்டாடப் படாத எங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் அத்தியாவசிய சேவை வழங்குநர்களை (essential service providers) நீ வெளிச்சம் போடு காட்டினாய், 2020ஆம் ஆண்டே! கொரோனாவால் எல்லோரும் வீட்டில் முடங்கிய போதும் சளைக்காமல் களைப்பின்றி சேவை செய்த அடிப்படை சேவை வழங்குநர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்த மனித இனத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

ஆன்லைனில் ஆதரவு

நாட்டின் பொருளாதார மந்த நிலையையும், வாழ்வாதாரத்தை தொலைத்து நின்ற நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையையும் கண்டு மிகவும் மனமுடைந்து போனேன். இரவும் பகலும் செய்திகளை பார்த்து பார்த்தே மனம் நொந்து போனேன்.

என் மனோநிலையை சமாளிக்க எனக்கு உதவிய ஒரே வழி தியானம் மற்றும் பிரார்த்தனை தான். எப்போதும் இல்லாத வகையில் நான் பிரார்த்தித்தும், தியானித்தும் அமைதி கண்டேன். இதற்காக ஆன்லைன் மூலமாக தொடர்ந்து ஊக்கமும் நம்பிக்கையும் அளித்து வந்த ஆன்மிகவாதிகளுக்கும் நேர்மறையான அதிர்வுகளை அளித்தவர்களுக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

ஆன்லைன் மீட்டிங்கா? நாங்கள் தயார்!

மிகக் கடினமான 2020 ஆம் ஆண்டு, தொழில்நுட்பம் சார்ந்த திறமைகளை வளர்த்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. நண்பர்களையும் உறவினர்களையும் என்னால் நேரில் சந்திக்க முடியாத நிலையில் கூகிள் சந்திப்புகள், ஜூம், ஹேங்கவுட் போன்ற புதிய தளங்கள் எனக்கு அறிமுகம் ஆகின. அவற்றின் மூலம் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ந்தேன்.

இவ்வகையில் ஆன்லைனில் ‘சோஷியலைஸ்’ செய்ய கற்றுக் கொண்டு குடும்ப அரட்டைகளை உயிர்ப்புடன் வாழ வைத்த எனது மாமாக்கள், அத்தைகள், சித்தி, வீட்டுப் பெரியவர்கள், நண்பர்கள் என அனைவரையும் நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன்!

புத்துயிர் பெற்ற கலை மற்றும் எழுத்து சார்ந்த ஈடுபாடு

நான் பல விஷயங்களை ஆன்லைனில் கற்றுக் கொண்டேன். ஏகப்பட்ட கவிதைகளையும் சிறுகதைகளையும் தொகுப்புக்கள் எனப்படும் ‘ஆந்தாலஜி’களுக்கு எழுதி அனுப்பி வைத்தேன். எனது சிந்தனை ஆற்றலையும் மனதையும் சீராக வைத்துக் கொள்ள இது மிகவும் உதவியது.

இத்துடன், ஓவியக் கலையையும் அதன் முறைகளையும் நன்கு பயின்றேன். அக்ரிலிக்ஸ் (acrylics) வகை ஓவியங்களின் மீதான என் ஈடுபாட்டை உணர வைத்ததும் இந்த காலகட்டமே. அக்ரிலிக் ஓவியக் கலையை கற்றுக்கொள்ள பல்வேறு ஆன்லைன் பயிற்சிகளை எடுத்தேன். ஒவ்வொரு முறை நான் அதைச் செய்தபோதும், ​​கூகிள் மற்றும் யூ-ட்யூப் தளங்களுக்கு நான் மனமுவந்து நன்றி சொன்னேன். மனிதத் தொடர்பு இல்லாத நிலையில் இந்த தளங்களே எனது ஆசிரியர்களாக மாறின.

உடலை சீர்ப்படுத்திய வீட்டுச் சமையலும் வீட்டு வேலைகளும்

சுழற்றியடித்த இந்த 2020ஆம் ஆண்டில் நான் 12 கிலோ எடையை இழந்தேன். ஆன்லைன் குழுக்களில் இணைந்து சமைக்க கற்றுக்கொண்டேன். இப்படி பொழுதுபோக்கிற்காக இணைந்த குழுக்களின் மூலம் சிறந்த நட்பும் நிறைய மலர்ந்தன.

நான் சமைத்த ஆரோக்கியமான உணவை உண்ட என் கணவர் பெருமகிழ்ச்சியடைந்தார். வீட்டில் நான் செய்த ‘பட்டர் சிக்கன்’ மற்றும் ‘நான்’ ரொட்டியை உண்ட என் மகனால் அது நானே சமைத்தது என்பதை நம்ப முடியவில்லை – அவ்வளவு கச்சிதமாக இருந்தது அதன் சுவை!

இத்துடன் நான் நிறைய பிரார்த்தித்தேன், உடற்பயிற்சி செய்தேன். வீட்டு வேலைகளையும், சமையல் வேலைகளையும் நிரம்ப செய்தேன். நான் இணைந்திருந்த ஆன்லைன் குழுக்கள் வாயிலாக வார இறுதி நாட்களில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு இலவச ஆன்லைன் வகுப்புகளையும் தன்னார்வத் தொண்டாக எடுத்து வந்தேன்.

நன்றியுணர்வுக்கான சிறந்த நேரம்

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் முதல் முறையாக ‘வொர்க்-ஃப்ரம்-ஹோம்’ முறையில் வீட்டிலிருந்து வேலை செய்தது, எனக்கு ஆற அமர உட்கார்ந்து சிந்திக்க ஒரு வாய்ப்பை அளித்தது. போக்குவரத்து செலவு சுருங்கியதால் சேமித்த பெட்ரோலுக்கான பணத்தை, லாக்டவுன் காலத்திலும் பசித்தோருக்கு உணவளிக்க ‘லங்கர்களை’ வைத்திருந்த குருத்வாராக்களுக்கு நன்கொடையாக வழங்கிய வாய்ப்பிற்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

தாவரங்களுடனான பொன்நேரம்

காற்று மாசுபாடு மற்றும் சமூக விலகல் விதிகள் காரணமாக இப்பொழுதும் வாரத்தில் இரண்டு முறை வீட்டிலிருந்து வேலை செய்கிறேன். இந்த நாட்களில் நான் என் தாவரங்களுடனான பிணைப்பினை மீண்டும் உயிர்ப்பித்து கொள்கிறேன்.

இப்போது பூக்கள், பூண்டு மற்றும் கீரைகளை தொட்டிகளில் வளர்த்து வரும் எனக்கு தாவரங்களை வளர்ப்பதில் எவ்வளவு உழைப்பு அடங்கி இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது. இதனாலேயே நான் விவசாயிகளுக்கு முன்பு எப்போதையும் விட உளமார நன்றி கூறுகிறேன்.

விடைபெறுகிறேன்!

2020ஆம் ஆண்டே! நீ வந்தாய், அனைத்தையும் மாற்றினாய், இப்போது விடைபெறத் தயாராக உள்ளாய். நீ எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாய். இவற்றில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம், இதயங்களை இணைக்கும் ஒரு பாலமாக நான் இருக்க வேண்டும் என்பது தான்.

எங்கள் வாழ்நாளின் மிகப்பெரிய சவாலை தாண்டிச் செல்லும் வலுவை நாங்கள் பெறுவோம். நிச்சயமாக தடுப்பூசி வரும், உலகம் குணமாகும். ஏனென்றால், மனிதர்களான நாங்கள் எந்த நிலையிலும் நின்று வெல்லும், தப்பிப் பிழைக்கும் திறன் படைத்தவர்கள்.

2021 ஆம் ஆண்டில் கோவிட் தாக்குதலை முறியடித்து மனித இனம் வெற்றிபெற மனமார பிரார்த்தனை செய்வேன்.

எலியட் யாமின் எழுதிய ‘ஐ வில் பீ தட் பிரிட்ஜ்‘ (‘நான் அந்தப் பாலமாக இருப்பேன்’) என்ற பாடலையே 2021 ஆம் ஆண்டிற்கான எனது தாரக மந்திரமாகக் கொண்டு புதிய தொடக்கங்களை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன், நான்.

எனவே நன்றியுடனேயே உன்னிடம் இருந்து விரைவில் விடைபெறுவேன், 2020 ஆம் ஆண்டே.

(தலையங்கப் புகைப்படம் ‘36 வயதினிலே’ திரைப்படத்திலிருந்து எடுக்கப் பட்டது.)

About the Author

Bindiya Bedi Charan Noronha

Bindiya is a linguist and works for a diplomatic mission in New Delhi. She is a published author, reluctant poet, passionate bibliotherapist and a happiness harbinger. Her heart beats in her community-building volunteer organization - “ read more...

1 Posts | 1,285 Views
All Categories