முதல் முறையாக வேலைக்கு செல்பவர்களுக்காக மூன்று விஷயங்கள்

முதல் முறையாக வேலைக்கு செல்பவர்கள்- குறிப்பாக பெண்கள்-இந்த மூன்று அடிப்படைக் கற்றல்களுடன் தயாராகுங்கள்!

முதல் முதலாக வேலைக்கு போகும் முன், பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இவை. 

பெரும்பாலான பெண்களுக்கு தங்களுக்கு கொடுத்த வேலையை செய்வதற்கும், அது முடிந்ததும் அமைதியாக ஒரு ஓரத்தில் இருப்பதற்கும் கற்பிக்கப்பட்டு விடுகிறது!

ஒருவருக்கு கிடைக்கும் முதல் உத்தியோகமானது கற்றலுக்கான ஓர் வளமான களமாகும். ஏனெனில் கல்வியறிவு தவிர்த்து தொழில்முறை பற்றி அதிக அனுபவம் இல்லாமல் ‘க்ளீன் ஸ்லேட்’டாக உலகில் நுழையும் ஒருவருக்கு கற்றல் மிக எளிதாகிறது.

நான் கற்றுணர்ந்த மூன்று விஷயங்கள்

‘எல்லாம் தங்களுக்குத் தெரியும்’ என்று நினைப்பவர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள் – அது ஒரு தனிக்கதை, விட்டுவிடுவோம் (நல்ல வேளை, அவர்கள் மிகச் சிலரே!). மற்றபடி வீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கற்றுத்தரும் ‘conditioning‘ எனப்படும் சில வழக்கங்களில் இருந்து விடுபட்டு, வேலையில் சிறப்பாக செயல்படுவதற்கு நிச்சயமாக அனைவருக்கும் இந்த மூன்று விஷயங்கள் பற்றிய அறிமுகம் தேவை.

நேரடியாக எனது முதல் வேலையில் நான் கற்றுக்கொண்ட மூன்று பாடங்கள் இவை. பொதுவாக புதியவர்கள், அதிலும் குறிப்பாக பெண்கள், சொல்லிவைத்தது போல் குறிப்பிட்ட சில அனுபவங்களை எதிர்கொண்டிருப்பார்கள்; இது போன்றவர்கள் பணியிடத்தில் எது வரினும் அதை முன்னின்று கையாள மனதளவில் தயாராக இருப்பது நல்லது.

இம்மாதிரியான அனுபவங்கள் நிச்சயமாக எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தன. எனக்கு அதை சுட்டிக்காட்டக்கூடிய ‘மென்டார்’கள் (mentors) அதாவது, நல்ல வழிகாட்டிகள் எனக்கு அமைந்தார்கள். சீக்கிரமாகவே இந்த உண்மைகளை நான் கற்றுணர்ந்தேன் என்பது குறித்து நான் எப்போதும் மகிழ்ச்சியடைகிறேன்.

உங்கள் பணி சார்ந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

வேலைக்கு சேர்ந்த புதிதில் பல இளைஞர்களுக்கு பல தயக்கங்கள் இருக்கின்றன. “இந்த அலுவலகத்தில் அதிகார பூர்வமாக அமர்ந்து, ஒரு அலுவலராக மதிக்கப்படும் தகுதிக்கு நாம் உரியவர் தானா?” என்று தனக்குள் வியந்து கொள்கிறார்கள்.

22 வயதே ஆன ஒரு இளம் அதிகாரியாக, நான் இன்டர்ன்ஷிப் மற்றும் சேல்ஸ் பணியில் இருந்த காலங்களில், நான் பலமுறை எனது திறமைகளை நிரூபித்திருந்தாலும், ஒரு கம்பெனி மீட்டிங் நடந்தபோது சிறந்த சேல்ஸ்/விற்பனையாளர்களை கௌரவிக்கும்படி என்னிடம் கேட்டபோது, ​​”நான் இதற்கு தகுதியானவள் தானா?” என்ற ஒருவித தயக்கத்துடனேயே ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் விருதைப் பெற்ற அந்த நபரோ, “தலைமையகத்திலிருந்து வந்த ஒரு பிராண்ட் மேனேஜரிடமிருந்து எனது உழைப்பிற்கான சிறப்பான அங்கீகாரம் கிடைத்தது”, என்று பெருமகிழ்ச்சி அடைந்தார்.

உண்மை என்னவென்றால், உங்கள் திறமையின் வரையறை எதுவாக இருந்தாலும், நீங்கள் வேலையைக் கற்றுக்கொண்டு விடுவீர்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நீங்கள் பணியமர்த்தப்பட்டீர்கள். உங்கள் உத்தியோகத்துடன் பொருந்திய அந்த கம்பீரமும் நடத்தையும் நீங்கள் ஏற்ற பணி சார்ந்த அதிகாரத்தின், பதவியின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். உங்கள் பணி சார்ந்த அதிகாரத்தை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் பணி கவனிக்கப்படுவதை உறுதிசெய்க

இளம் பெண்கள் பலருக்கு, வெறுமனே நல்ல மதிப்பெண்கள் பெறவும், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சொல்வதுபடி கேட்டு நடந்தாலே போதும் என்றும் பிரத்யேகமாக கற்பிக்கப்படுகிறது.

நாமும், ‘நாங்கள் எங்கள் வேலைகளை செய்து விட்டு அமைதியான சமர்த்துப் பெண்களாக, நல்ல பெண்களாக இருப்போம்’ என்றே இருந்துவிடுகிறோம். ஆனால் பணியிடத்தில், உங்கள் வேலையை செய்வது மட்டும் ஒருபோதும் போதாது; இதை செய்தது நான் தான் என்று தெரியப்படுத்துவதும் அவசியம் ஆகும்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் (efforts), மற்றும் நீங்கள் அடையும் வெற்றிகளையும், பெறும் ரிசல்ட் பற்றியும் மற்ற அதிகாரிகளுக்கு நீங்கள் முனைப்புடன் தெரியப்படுத்த வேண்டும் – ஏனென்றால் ஒரு சிலருக்கு மட்டுமே இத்தகைய செயலாற்றல் இருக்கும். இது உங்கள் திறமைக்கான வெளிப்படையான ஆதாரமாகும்.

உங்கள் திறமையை புரிந்து கொண்டு நீங்கள் அமைதியாக இருந்தாலும் ‘இது உங்களுடைய திறமையால் சிறப்பாக நடந்து முடிந்த வேலை’, என்று அங்கீகரிக்கும் மேலதிகாரிகள் மிக அரிதானவர்கள். அது போல் ஒருவர் அமைவது கடினம்.

எனது முதல் பணியில் ‘பெர்செப்ஷன் மேனேஜ்மென்ட்’ (perception management)-இல் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டேன்; அதாவது, “உங்கள் பணி கவனிக்கப்படுவதை உறுதிசெய்க” என்று எனக்கு சொல்லப்பட்டது!

உங்களுக்கென்று ஒரு ஆதரவாளர் இருப்பது அவசியம்!

தங்களது பணியில் எந்த கட்டத்தில் உள்ளவர்களுக்கும் இது மிகவும் அத்தியாவசியமான ஆலோசனையாகும் – குறிப்பாக புதியவர்களுக்கு மிக மிக அவசியம்! உங்கள் பணியிடத்தில், உயர்பதவியில் பெரும் செல்வாக்கும் உடைய Sponsor எனப்படும் ஆதரவாளர் உங்களுக்கு இன்றியமையாத ஒருவர் ஆவார். மென்டார் (Mentor) எனப்படும் வழிகாட்டியாக, உங்கள் வேலைத்திறன் மற்றும் பங்களிப்புகளை அறிந்துவைத்திருப்பவராக இந்த ஸ்பான்சர் (Sponsor) இருக்க வேண்டும்.

இவரே உங்களது பணியிடத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வுகளுக்காக உங்கள் பெயரை பரிந்துரைத்து முன்வைப்பவர்.

இது அவ்வளவு எளிதானது அல்ல, குறிப்பாக பெண்களுக்கு. ஏனெனில் மேலதிகாரத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இன்றும் ஆண்களாகவே இருக்கிறார்கள். உங்களுக்கு தடையாக இருக்கும் இது போன்றவற்றை சரியான அணுகுமுறை மற்றும் பணியிட கொள்கைகளைக் கையாள்வதால் முறியடித்து முன்னேற முடியும்.

சரி, உங்கள் முதல் வேலையில் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்ன? உங்களிடமிருந்து அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்!

இந்தப் பதிவு முதலில் இங்கே வெளியிடப்பட்டது.

(மேற்காணும் புகைப்படம் ‘ஏ மாயா சேஸாவே’ திரைப்படத்தில் இருந்து எடுக்கப் பட்டது)

About the Author

Anju Jayaram

A traveler at heart and a writer by chance a vital part of a vibrant team called Women's Web. I Head Marketing at Women's Web.in and am always evolving new ways in read more...

1 Posts | 1,881 Views
All Categories